தமிழகம்

காசோலை மோசடி வழக்கில் ‘கோச்சடையான்’ பட நிறுவன இயக்குநர்களுக்கு பிடிவாரண்ட்

செய்திப்பிரிவு

ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின் மென்ட் நிறுவனம் தயாரித்தது. திரைப்படத் தயாரிப்புக்காக இந்த நிறுவனம் ஆட் பீரோ அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கியது. லாபத்தில் 20 சதவீதம் வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ.10 கோடி கடன் 2014 ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.

கணக்கில் பணமில்லை

இந்தக் கடனை திருப்பிச் செலுத்தும் விதமாக ரூ.3 கோடிக்கு மீடியா ஒன் நிறுவனம் சார்பில் காசோலை வழங்கப்பட்டது. இந்த காசோலையை வங்கியில் சமர்ப்பித்தபோது போதிய பணமில்லை என காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து மீடியா ஒன் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சென்னை பெருநகர 13-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை யின்போது மீடியா ஒன் நிறுவன இயக்குநர்கள் யாரும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் மீடியா ஒன் நிறுவன இயக்குநர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாதது குறித்து காரணம் தெரிவிக்கப்பட்டது.

இந்த காரணத்தை ஏற்க மறுத்த பெருநகர 13-வது மாஜிஸ்திரேட் எஸ்.கோபிநாதன், வழக்கு விசாரணையின்போது தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மீடியா ஒன் நிறுவன இயக்குநர்கள் மீது பிணையில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்ததுடன், இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

SCROLL FOR NEXT