தமிழகம்

ஊழலுக்கு எதிரான அனைவரும் மக்கள் நல கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும்: ஆர்.நல்லகண்ணு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஊழலுக்கு எதிரானவர்கள் அனை வரும் மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 91-வது ஆண்டு விழாவும், நல்லகண்ணுவின் 91-வது பிறந்த நாள் விழாவும் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சிக் கொடியை நல்லகண்ணு ஏற்றிவைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் நல்லகண்ணு வுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

பிறந்தநாள் குறித்து நிருபர் களிடம் நல்லகண்ணு கூறியதாவது:

1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளில்தான் நான் பிறந்தேன். எனக்கும், கட்சிக்கும் ஒரே வயது. தமிழகத்தில் 1967-க்குப் பிறகு திமுகவும், அதிமுகவும் மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும் மக்கள் நலனுக்கான மாற்றங்கள் நடைபெறவில்லை. ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் நடைபெறவில்லை.

தமிழகத்தில் ஊழலற்ற நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதற்காகவே இடதுசாரி கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் இந்தக் கூட்டணியில் இணைய வேண்டும்.

இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

SCROLL FOR NEXT