கூடலூரில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த காட்டு யானை, கும்கி யானைகளின் உதவியுடன் பிடிபட்டது. வனத்துறையினர் யானைக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்தில் உள்ள மேல்கூடலூர், கோக்கால், சில்வர்கிளவுட் ஆகிய பகுதிகளில் கடந்த ஓராண்டாகப் பின்பகுதியில் பலத்த காயத்துடன் சுமார் 30 வயதுடைய ஆண் யானை சுற்றிவந்தது. கடந்த ஆண்டு அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க பலாப் பழத்தில் மருந்து, மாத்திரைகளை வைத்து சில்வர்கிளவுட் பகுதியில் செல்லும் பாதையில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்த யானை கூடலூரின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடமாடி வந்தது. இரண்டு ஆண்டுகளில் அந்தக் காயம் பெரிதாகி, யானையின் பின்பகுதி முழுக்கப் புரையோடி புழு வைத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தது.
‘இந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்துச் சிகிச்சை அளித்தால் உயிரிழக்க வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்த வனத்துறையினர் சிகிச்சை அளிக்கத் தயக்கம் காட்டி வந்தனர். மிக மோசமான காயத்துடன் அவதிப்பட்டு வரும் இந்த யானைக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் யானையைப் பிடித்து சிகிச்சை அளிக்க முடிவுசெய்த வனத்துறையினர், கடந்த மூன்று நாள்களாக முயற்சி மேற்கொண்டு வந்தனர். மேலும் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதுமலையில் உள்ள அபயரண்யம் பகுதியில் `க்ரால்' எனப்படும் மரக்கூண்டை அமைத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை புத்தூர் வயல் பகுதியில் தென்பட்ட யானையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையிலும், வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தாமல், கும்கிகள் உதவியுடன் பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். யானையை அப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ''ஈப்பங்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் காப்பி தோட்டத்தில் யானை இருப்பதை உறுதி செய்தோம். விஜய், சுமங்களா ஆகிய இரண்டு கும்கி யானைகள் அதன் பாகன்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழுவோடு யானையைச் சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தாமலேயே காலில் கயிற்றைப் பிணைத்து, கட்டுக்குள் கொண்டுவந்தோம். காலில் வீக்கம் அதிகமாக உள்ளது. அறுவை சிகிச்சைக்காக சிறப்புக் கால்நடை மருத்துவர்களை வரவழைத்துள்ளோம். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தனர்.