தமிழகம்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்: வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்

ஜெ.ஞானசேகர்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத்தான் தெரியும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கோயில் விவகாரங்களில் திமுகவின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளாரே?

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத்தான் தெரியும். ஆன்மிகம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்யத் துடிக்கும் சக்திகளுக்கு இதுபோன்ற செயல்பாடுகள் சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும். ஆனால், வார்த்தை ஜாலங்களுக்காக அன்றி, நிச்சயமாகச் செயல்படுத்தக் கூடிய திட்டங்களைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவிக்கிறது.

ஆகமப் பயிற்சி முடித்துள்ளவர்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா?

தமிழ்நாட்டில் ஏற்கெனவே சைவ, வைணவத்துக்கு என்று 6 பள்ளிகள் உள்ளன. வரப் பெறும் விண்ணப்பங்களைப் பொறுத்து அந்தப் பள்ளிகளைச் சீரமைத்து மீண்டும் பயிற்சி வகுப்புகளைத் தொடங்க, இந்து சமய அறநிலையத்துறை தயாராக உள்ளது.

மாநிலம் முழுவதும் கோயில்கள் திறப்பு எப்போது?

கரோனா கட்டுக்குள் வந்தபிறகு வெகு விரைவில் கோயில்கள் திறக்கப்படும்.

கோயில் வளாகங்களில் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்படுமா?

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

முன்னதாக, கோயிலுக்கு வந்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாணிக்கவிநாயகர் சந்நிதி, தருமபுரம் ஆதினம் மவுனமடம், உச்சி பிள்ளையார் சந்நிதி ஆகிய இடங்களில் வழிபாடு நடத்தினார். மேலும், கோயிலில் உள்ள பல்லவர் குகையை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பார்வையிட்டனர்.

ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் அர.சுதர்சன், இந்து சமய அறநிலையத்துறை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, த.விஜயராணி (மலைக்கோட்டை) மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT