புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் முறையாக பாஜக எம்எல்ஏ பேரவைத் தலைவராக இன்று பதவியேற்றார். அதே நேரத்தில் தேர்தலில் வென்று 45 நாட்களாகியும் ஆளும் கூட்டணி அமைச்சரவை பதவியேற்காத சூழலே நிலவுகிறது.
புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அமைச்சர்களைப் பங்கிடுவதில் இரு கட்சியிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. முதல்வர் ரங்கசாமி பாஜக மேலிடத்திடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இழுபறி முடிவுக்கு வந்தது. இதில் பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸுக்கு 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி என முடிவு செய்யப்பட்டது..
இதையடுத்துப் புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலர் முனிசாமி கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். மணவெளி தொகுதி பாஜக எம்எல்ஏ செல்வம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அவரின் மனுவை முதல்வர் ரங்கசாமி, பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நமச்சிவாயம், கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் 8 மனுக்கள் தாக்கல் செய்தனர். நேற்று மதியம் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்தது. பேரவைத் தலைவர் தேர்தலுக்கு வேறு எம்எல்ஏக்கள் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் செல்வம் போட்டியின்றிப் பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கூடிய புதுவை சட்டப்பேரவையில் தற்காலிகப் பேரவைத் தலைவர் லட்சுமி நாராயணன், பேரவைத் தலைவராக செல்வம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவரைப் பதவியேற்க அழைத்தார். அவை முன்னவரான முதல்வர் ரங்கசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் சிவாவும் பேரவைத் தலைவரை அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர். பின்னர் புதிய பேரவைத் தலைவரை எம்எல்ஏக்கள் வாழ்த்திப் பேசினர்.
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "சட்டப்பேரவையைச் சிறப்பாகப் பேரவைத் தலைவர் நடத்துவார் என நம்புகிறேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூற பேரவைத் தலைவர் சமமாக வாய்ப்பளிப்பார். அவருக்கு எனது வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டார்.
அதையடுத்துப் பேரவைத் தலைவர் ஏற்புரைக்குப் பிறகு, காலவரையின்றி பேரவையை ஒத்திவைத்தார். புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்தவர் பேரவைத் தலைவராகப் பதவியேற்றுள்ளார். . கரோனாவையொட்டி சட்டப்பேரவையில் சமூக இடைவெளி உடன் இருக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதே நேரத்தில் தேர்தலில் வென்று 45 நாட்களாகியும் அமைச்சரவை இன்னும் புதுச்சேரியில் பதவியேற்காததால் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களே கடும் அதிருப்தியில் உள்ளனர்.