அரியலூரில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி தரக் கூடாது என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் கொள்ளிடக்கரை மாவட்டமான அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான கிணறுகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவிரி பாசனப் பகுதிகளின் ஓர் அங்கமாகத் திகழும் அரியலூர் மாவட்டத்தைப் பாலைவனமாக்கும் இத்திட்டம் கண்டிக்கத்தக்கது.
அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கான ஓஎன்ஜிசி நிறுவனத்தின் திட்டம் புதிதல்ல. ஏற்கெனவே, கடந்த 4 ஆண்டுகளாக இதற்கான முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்ட நிலையில், இப்போது ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெறலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் காரணம் காட்டி, 10 திட்டங்களுக்குத் தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசி விண்ணப்பித்திருக்கிறது.
இதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் துடித்துக் கொண்டிருக்கிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அந்த முயற்சிகளும் உறுதியாக முறியடிக்கப்பட வேண்டும்.
காவிரி பாசன மாவட்டங்கள்தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகத் திகழ்கின்றன. அந்தப் பகுதிகளில் ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம், மீண்டும் மீண்டும் வேளாண் விளைநிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்தி, முப்போகம் விளையும் காவிரிப் படுகையை பாலைவனமாக மாற்றிவிடக் கூடாது.
தமிழக அரசால் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பகுதிகள் சேர்க்கப்பட்டுவிட்டன. இந்த மண்டலத்தில் அரியலூர் மாவட்டம் சேர்க்கப்படாததைப் பயன்படுத்திக் கொண்டு அந்த மாவட்டத்தின் வழியாக காவிரி படுகைக்குள் நுழைய ஓஎன்ஜிசி நிறுவனம் முயல்கிறது. இதை எந்த வகையிலும் அரசு அனுமதிக்கக் கூடாது.
அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தாக்கல் செய்துள்ள அனுமதியை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டத்தில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தை தமிழக அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்".
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.