தமிழகம்

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளது: ஆளுநர் தமிழிசை பேட்டி

அ.முன்னடியான்

கரோனா 3-வது அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளது எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தை நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சுகாதாரத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 100 மையங்களில் தடுப்பூசி திருவிழா இன்று (ஜூன் 16) தொடங்கியது. இது வருகின்ற 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் காந்தி வீதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் புதுச்சேரியை கரோனா இல்லாத மாநிலமாகவும், முழுவதுமாகத் தடுப்பூசி போடப்பட்ட மாநிலமாகவும் மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கு முன்பு நடந்த தடுப்பூசி திருவிழாவுக்கு மக்களை அழைத்தபோது தயக்கத்துடன் இருந்தார்கள். தற்போது கொஞ்சம் தயக்கம் நீங்கி மக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைந்து, முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடந்துள்ளது. இதனால் மக்களுக்கு அனைத்து நலன்களும் கிடைக்கும். நோயற்ற மாநிலமாக புதுச்சேரி நிச்சயமாக மாறும். இன்றிலிருந்து 4 நாட்கள் நடக்கவுள்ள தடுப்பூசி திருவிழாவில் மக்கள் கலந்துகொள்ள வேண்டும்.

தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. பிரதமரும் 21-ம் தேதியில் இருந்து தேவையான அளவு தடுப்பூசிகள் இலவசமாகத் தருவதாக அறிவித்துள்ளார். இவ்வளவு மக்கள்தொகை கொண்ட நாட்டில் இலவசமாகத் தடுப்பூசி தரப்படுவதும், அதனால் மக்கள் பலனடைவதும் இந்தியாவில்தான் நடக்கிறது.

புதுச்சேரியில் ஒரு நாள் கூட மக்களுக்குத் தடுப்பூசி இல்லை என்ற நிலை வரவில்லை. மக்கள் வந்து தடுப்பூசி இல்லை என்று திருப்பி அனுப்பப்படவில்லை. அதற்காக நிர்வாகத்தைப் பாராட்டுகிறேன். முதல் நாளில் இருந்து நமக்குத் தேவையான தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறப்பட்டு கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

’புதுச்சேரி மாதிரி’ என்று சொல்லும் அளவிற்கு சில மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நேரத்தில் புதுச்சேரியில் தரவுகளுடன் கூடிய ஊரடங்குதான் கடைப்பிடித்தோம். எப்போதுமே மக்களின் வாழ்வாதாரம் கவனத்தில் கொள்ளப்பட்டது.

கோயில்கள் திறக்கப்பட்டு எல்லோரும் தனிமனித இடைவெளியோடு வழிபாடு செய்கின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு வந்துள்ளது. அதேபோல் எல்லோருக்கும் முகக்கவசம் அணியும் பழக்கமும் வந்துவிட்டது. இதற்காக மக்களைப் பாராட்டுகிறேன். கணிசமான அளவுக்கு நோய்த்தொற்று குறைந்திருக்கிறது. ஒருவர் கூட இறக்கக் கூடாது.

ஆனாலும், இறப்பு விகிதமும் குறைந்துவரும் வகையில் சுகாதாரத்துறை மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளும் இணைந்து பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது அப்படியே தொடர வேண்டும். கரோனா மூன்றாவது அலை வரக்கூடாது என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன். தடுப்பூசி போட்டுக்கொண்டால் மூன்றாவது அலையை நாம் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடுகளில் 3-வது அலை மிதமானதாகவே வந்துள்ளது. மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளது. அதற்காக தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. மக்கள் அலை அலையாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டால் மூன்றாவது அலை வருவதைத் தடுக்க முடியும்.’’

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT