பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒரு சிங்கம் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஒரு ஆண் சிங்கம் கரோனா தொற்றால் உயிரிழந்தது.

சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீலா என்ற பெண் சிங்கம் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தது. இதனையத்து, மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் உயிரிழந்த பெண் சிங்கம் உட்பட 10 சிங்கங்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 4 புலி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண் சிங்கம் ஒன்று (ஜூன் 16) உயிரிழந்தது.

இது தொடர்பாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் துணை இயக்குநர் இன்று (ஜூன் 16) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்க உலாவிடும் பகுதியில் 12 வயதுள்ள பத்மநாதன் என்ற ஆண் சிங்கம் இன்று காலை 10.15 மணியளவில் உயிரிழந்தது.

இந்த சிங்கத்தின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்பட்டதில், அந்நிறுவனத்தின் 03.06.2021 தேதியிட்ட அறிக்கையில் இச்சிங்கத்திற்கு கோவிட் தொற்று உள்ளது என்று தெரியவந்ததைத் தொடர்ந்து, அச்சிங்கம் தீவிர சிகிச்சையில் இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT