சசிகலாவுக்கு புதுச்சேரி அதிமுக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில அவைத் தலைவர் பரசுராமன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
''நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா, ஆட்சியை இழந்திருந்தாலும் அதிமுகவின் அசுர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதிமுகவைக் கைப்பற்றி, தனது குடும்பச் சொத்தாக மாற்ற நாடகத்தனமான செயலில் ஈடுபடுவதை புதுச்சேரி அதிமுக கண்டிக்கிறது.
கேள்வியும் நானே! பதிலும் நானே! என்ற விதத்தில் தினந்தோறும் தொண்டர்களிடம் பேசுவதாக வீண் விளம்பரம் செய்து குழப்பம் ஏற்படுத்தும் சசிகலாவின் தீய முயற்சியை முறியடித்துச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கிறோம்".
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் தொடர்பாக அதிமுக கிழக்கு மாநிலச் செயலர் அன்பழகன் கூறுகையில், " சசிகலாவின் தவறான போக்கைத் தடுத்து நிறுத்தும் கட்சித் தலைமையின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை புதுச்சேரி அதிமுக அளிக்கும். தேர்தலோடு அதிமுக அழியும் என்று சசிகலா நினைத்தார். தேர்தலுக்குப் பிறகும் அதிமுக வளர்ச்சி பெற்றுள்ளதால் கட்சியைக் கைப்பற்ற முயல்கிறார்" என்று குறிப்பிட்டார்.