'எல்லோருக்கும் எல்லாம்' என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதே பிரதான இலக்கு என, கரூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பிரபுஷங்கர் தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் வடிகால் வாரிய செயல் இயக்குநராகப் பணியாற்றி வந்த பிரபுஷங்கர் (38), கரூர் மாவட்ட ஆட்சியராக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராக பிரபுஷங்கர் இன்று (ஜூன் 16) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் பிரபுஷங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள ஆட்சியர்களுக்கு எப்படிச் செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
'தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனான் பவர்க்கு' - எனும் வள்ளுவரின் குறள்படி, நிர்வாகத்தைச் செழுமையான முறையில் வழங்குவதே தலையாயப் பணி.
'எல்லோருக்கும் எல்லாம்' என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதே பிரதான இலக்கு. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, பொதுமக்கள் குறை தீர்ப்பதில் முழு முயற்சி எடுத்து சீரிய முறையில் தீர்க்க அனைத்துத் துறைகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
வேளாண், தொழில் என ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் என அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி மேற்கொள்ளப்படும். அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முழு முயற்சி மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, கரோனா 2-ம் அலை தொற்றுப் பரவலைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, வீரியம் கட்டுக்குள் வந்துள்ளது. முயற்சி மற்றும் சீரிய முன்னெடுப்புகளால் கரோனா பரவல் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்படும்".
இவ்வாறு ஆட்சியர் பிரபுஷங்கர் தெரிவித்தார்.