கரூர் மாவட்டம் வாங்கல் அருகே காணாமல் போன சிறுவர்கள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து வாங்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை அடுத்த பீமநாயக்கனூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் மனைவி சித்ரா (40). இவர்கள் மகன் தங்கதுரை (10). இவர்கள் தற்போது என்.புதூர் தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத் தோட்டத்தில் வசித்து வந்தனர். தங்கதுரை அரவக்குறிச்சி அருகேயுள்ள கோவிலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்புப் படித்து வந்தார்.
கரூர் மாவட்டம் வாங்கல் அருகேயுள்ள என்.புதூர் பகவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் மகன் சுஜித் (10). அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்புப் படித்து வந்தார்.
தங்கதுரை, சுஜித் இருவரும் தேங்காய் பொறுக்குவதற்காக தனியார் டெக்ஸ் சுற்றுச்சுவரை நேற்று முன்தினம் தாண்டி குதித்து அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பிற்குச் சென்றுள்ளனர். அதன்பிறகு இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து வாங்கல் போலீஸில் தங்கதுரையின் தாய் சித்ரா, மகன் தங்கதுரை, மகனின் நண்பன் சுஜித் இருவரையும் காணவில்லை எனப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வாங்கல் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் என்.புதூரில் இருந்து துவரம்பாளையம் செல்லும் வழியில் வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள விவசாயக் கிணற்றில் இன்று (ஜூன் 16ம் தேதி) தங்கதுரை, சுஜித் ஆகிய இருவரின் சடலங்கள் மிதந்தன. இதையடுத்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தினர் தங்கதுரை, சுஜித் ஆகிய இருவரின் சடலங்களை மீட்டனர். வாங்கல் போலீஸார் இருவரின் சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.