பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கியதற்காக, முதல்வர் ஸ்டாலினிடம் இன்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேரில் நன்றி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், கடந்த 28-ம் தேதி ஒரு மாதம் பரோலில் 4-வது முறையாகத் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
பேரறிவாளனுக்கு சிறுநீரகத் தொற்று இருப்பதால், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மேலும், பேரறிவாளனுக்கு சிறுநீரக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், அதற்காக பரோல் வழங்க தமிழக அரசுக்கு அற்புதம்மாள் விண்ணப்பித்தார். இதனையேற்ற தமிழக அரசு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (ஜூன் 16) பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.
இதையடுத்து, அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"பேரறிவாளனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. எனவே, மருத்துவர்கள் பரிந்துரையின்படி, உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும் என முதல்வரிடம் மனு கொடுத்தேன். உடனடியாக முதல்வர் ஸ்டாலின் 30 நாட்கள் பரோல் அளித்தார். அதற்காக அவருக்கு நேரில் நன்றி தெரிவித்தேன்.
பேரறிவாளனுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட தாங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஏனென்றால், இப்போதுதான் பேரறிவாளனுக்கு சிகிச்சையே தொடங்கியிருக்கிறோம். அவருக்குச் சரியாக சிகிச்சை அளிக்கப்படாததால், உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து சிகிச்சை தேவை. ஆனால், பேரறிவாளனுக்கு அது கிடைக்கவில்லை. இனியாவது சிகிச்சை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். அதனை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்ன முடியுமோ அதனை நிச்சயமாக செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.
நீங்கள் என்ன உணர்வுடன் இருக்கிறீர்களோ, அதே உணர்வுடன் நானும் இருக்கிறேன் என முதல்வர் சொன்னார். எழுவர் விடுதலை குறித்து நாங்கள் ஏதும் பேசவில்லை".
இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார்.