மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் தேடப்பட்டு வந்த சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்குத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இருவர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்பத் தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது. கைதில் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில், அவர் டெல்லியில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், டெல்லி போலீஸார் அவரைக் கைது செய்தனர். காஸியாபாத் பகுதியில் சித்தரஞ்சன் பார்க் அருகே அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சிபிசிஐடி வசம் சிவசங்கர் பாபா ஒப்படைக்கப்பட்டார்.
அங்கேயே அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தமிழகம் அழைத்து வரப்படுவார் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.