ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

1.13 லட்சம் கரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல்: விசாரணைக்கு ஆணையிட ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

1.13 லட்சம் கரோனா மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள ஆய்வு குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் உயிரிழப்புகளின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்படுவதாக பாமக குற்றம் சாட்டி வந்த நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 1.13 லட்சம் கரோனா உயிரிழப்புகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

குடும்பத் தலைவர்கள் பலரை கரோனா பலி வாங்கிவிட்ட நிலையில், அவர்களின் குடும்பங்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவிகளையும் தடுக்கும் வகையில் உயிரிழப்புகளை மறைப்பது கண்டிக்கத்தக்கது.

கரோனா உயிரிழப்புகளைத் தமிழக அரசு திட்டமிட்டே குறைத்துக் காட்டுவதாகவும், உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கடந்த மே 15ஆம் தேதி புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதேபோல், கரோனாவால் உயிரிழந்த பலருக்கும் அவர்கள் வேறு நோய்களால் உயிரிழந்ததாகத் தவறான சான்றிதழ் அளிக்கப்படுவதாகவும் கடந்த 4ஆம் தேதி இன்னொரு அறிக்கையை வெளியிட்டேன்.

ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐசிஎம்ஆர் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, அந்தக் குற்றச்சாட்டுகளைத் தமிழக அரசு மறுத்தது. ஆனால், இப்போது உண்மை அம்பலத்துக்கு வந்துவிட்டது.

தமிழ்நாட்டில் கரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக அறப்போர் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமக்கள் ஆய்வில் கரோனா உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் தவறானவை; திரிக்கப்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மதுரை, திருச்சி, கோவை, கரூர், திருப்பூர், வேலூர் ஆகிய 6 மாநகரங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 11,699 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவமனை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இதே காலக்கட்டத்தில் 2019-ம் ஆண்டு ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 7262-ம், 2020-ம் ஆண்டு உயிரிழப்புகளை விட 8438-ம் அதிகம் ஆகும். அதன்படி பார்த்தால், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 6 மருத்துவமனைகளில் மட்டும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,262 முதல் 8,438 வரை இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.

ஆனால், சம்பந்தப்பட்ட 6 மருத்துவமனைகளில் கடந்த 2 மாதங்களில் 863 பேர் மட்டுமே கரோனாவால் இறந்ததாக, தமிழக அரசின் அதிகாரபூர்வ செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், 6 மருத்துவமனைகளில் மட்டும் கரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 9.80 மடங்கு, 7,575 உயிரிழப்புகள் குறைத்துக் காட்டப்பட்டிருப்பதாகக் கருதலாம்.

இதே அளவீட்டைத் தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருத்திப் பார்த்தால் கரோனாவால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா தாக்குதலுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 26,126 பேர் உயிரிழந்திருக்க வேண்டும்.

அரசுத் தரப்பில் 12,870 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 13,256 சாவுகள் மறைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் புள்ளிவிவரம் யூகத்தின் அடிப்படையிலானதுதான். இது துல்லியமாக இருக்க வேண்டியதில்லை தான். அதேநேரத்தில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டது உண்மை என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

மறைக்கப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை இந்த ஆய்வில் தெரியவந்ததை விட ஓரிரு விழுக்காடு கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். ஆனால், சற்றேறக்குறைய ஒரு லட்சம் உயிரிழப்புகளாவது மறைக்கப்பட்டிருக்கலாம் என்பது உறுதி.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசால் கணக்கில் காட்டப்பட்டதை விட 5 முதல் 8 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று கடந்த சில வாரங்களாகவே பாமக கூறிவந்தது. இந்த ஆய்வறிக்கையின் மூலம் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கரோனா ஆய்வு முடிவு வருவதற்கு முன்பாகவே உயிரிழந்தவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நெகட்டிவ் வந்து உயிரிழந்தவர்கள் உள்ளிட்ட பலரும் கரோனாவால் உயிரிழக்கவில்லை என்று தமிழக அரசு கணக்கிட்டிருக்கிறது.

உயிரிழப்புக்குக் காரணமான பல நோய்களும், உடல்நலப் பிரச்சினைகளும் கரோனாவால்தான் ஏற்பட்டன எனும்போது, அவர்களின் உயிரிழப்புக்கு கரோனா காரணமல்ல என்று பதிவு செய்வது அபத்தத்தின் உச்சமாகும்.

இந்தத் தவறைச் செய்துவிட்டு, ஐசிஎம்ஆர் விதிகளைக் காரணம் காட்டி பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையிலோ, வீட்டிலோ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் அனைவரும் கரோனாவால் உயிரிழந்தவர்களாகவே கருதப்பட வேண்டும். கரோனா உயிரிழப்புகளை உறுதி செய்வதற்கான இந்த அளவீட்டை அரசு ஏற்க வேண்டும்.

மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் யார்? என்பதற்கான அளவீடு திருத்தப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதேபோல் புதிய அளவீட்டின்படி கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் நிதி உதவிகளை தமிழக அரசும், மத்திய அரசும் அறிவித்துள்ளன. கரோனா தாக்குதலால் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்தகைய உதவிகளைப் பெற கரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும், அதற்கான உண்மையான காரணங்களுடன் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். எனவே, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழந்த அனைவரின் இறப்புக்கான காரணங்களையும் ஆய்வு செய்து, கரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு இறப்புக் காரணத்திற்கான மருத்துவச் சான்றை (Medical Certification for cause of death)) வழங்க வேண்டும்; அதற்கான வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

கரோனா உயிரிழப்பு குறித்த அரசின் உதவிகளைப் பெறுவதற்கு அச்சான்றிதழை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT