ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

செய்திப்பிரிவு

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காய்குறிச்சி வடத்தெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சர்வதேச ஏலத்திற்கு அழைப்பாணை விடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்த பிறகு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்பந்த புள்ளிகளை கோரியிருப்பது விவசாயிகளிடையே மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே, விவசாயிகளுடைய நியாயமான அச்சத்தை போக்கும் வகையில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT