தமிழகம்

கருப்பு பட்டை அணிந்து ஜூன் 18-ல் மருத்துவர்கள் போராட்டம்: பாதுகாப்பு சட்டம் இயற்றக் கோரிக்கை

செய்திப்பிரிவு

மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றக்கோரி நாடுமுழுவதும் மருத்துவர்கள், வரும் 18-ம் தேதி கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழக கிளை) தலைவர் பி.ராமகிருஷ்ணன், செயலாளர் ஏ.கே.ரவிக்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா தொற்றுக்கு எதிரானபோரில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் இயங்கி வருகின்றனர். அவர்களின் தியாகத்தை புரிந்துகொள்ளாமல் அசாம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் முன்களப் பணியாளர்கள் தாக்கப்படுகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மருத்துவத் துறையினருக்கு எதிரான வன்முறை மற்றும் பொருள்சேதத்தை தடுக்க மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

இதேபோன்று, மருத்துவத்துறை பணியாளர் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். மருத்துவப் பணியாளர்களை தாக்குபவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி நாடுமுழுவதும் மருத்துவப் பணியாளர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றுகின்றனர்.

மருத்துவமனை மற்றும் கிளினிக் வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள், குறிப்பு அட்டைகள் வைக்கப்படும். மக்கள் பிரதிநிதிகளையும், மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT