தமிழகம்

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிடம் விசாரிக்க டேராடூன் விரைந்தது சிபிசிஐடி

செய்திப்பிரிவு

பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிசிஐடி போலீஸார் உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் விரைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாரதி, தீபா ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிவசங்கர்பாபா மீதான பாலியல் வழக்கைசிபிசிஐடிக்கு மாற்றம் செய்துடிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளி மாநிலத்துக்கு சென்றுவிசாரணை நடத்த ஏதுவாக, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில், சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்துள்ளது. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல வாய்ப்பு இருப்பதால், அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கவும் சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

SCROLL FOR NEXT