தமிழகம்

600 வட மாநில தொழிலாளர் குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு: ஓட்டுரிமை இல்லாததால் புறக்கணிக்கப்படுவதாக புகார் - அடிப்படை நிவாரணம்கூட கிடைக்கவில்லை என கவலை

கி.ஜெயப்பிரகாஷ்

திருவொற்றியூர் பகுதியில் தற் காலிக குடியிருப்புகள் அமைத்து 10 ஆண்டுகளாக வசித்து வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த வெள்ள நிவாரணமும் கிடைக்க வில்லை. ஓட்டுரிமை இல்லாததால் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருவொற்றியூரில் இருந்து விம்கோ நகர் வரையில் ரயில் பாதைகளை சுற்றி பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் கூலி தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். குறிப்பாக சடையன் குப்பம், பர்மாநகர் பகுதியில் மட்டுமே சுமார் 600 பேர் வசிக் கின்றனர். இவர்கள் இங்குள்ள சிறு தொழிற்சாலைகள், கடைகளில் தினக்கூலியாக பணியாற்றி வரு கின்றனர். சில இடங்களில் துப்புரவுப் பணியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

சமீபத்தில் பெய்த கனமழை இவர்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது. வீட்டில் இருந்த பொருட்களையும் இழந்து பரி தவித்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது:

ஷோபா தேவி:

இங்குள்ள சிறிய தொழிற்சாலையில் கடந்த 9 ஆண்டு களாக தினக்கூலியாக பணியாற்றி வருகிறேன். ரயில் பாதையோரம் தற்காலிக குடியிருப்பில் வசித்து வருகிறேன். சமீபத்தில் பெய்த கனமழையால் வீட்டில் இருந்த அடுப்பு, பாய், போர்வை, ஆடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. எங்களுக்கு ஏதேனும் அடிப்படை உதவிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

நரேஷ் வர்மா, நிரேஷ் வர்மா:

கனமழையின்போது படகு மூலம் எங்களை மீட்டார்கள். பிறகு, 5 நாட்களாக சில அமைப்புகள் மூலம் உணவுப் பொருட்கள் கிடைத்தன. தற்போது மீண்டும் எங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு திரும்பியுள்ளோம். ஆனால், வீட்டில் எந்த பொருளும் இல்லை, உடனடியாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. மற்ற இடங்களில் அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்துகின்றனர். எங்களிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை. எனவே எங்கள் குறைகளை கேட்க ஆளில்லை.

பாப்பு பிரசாத்:

நாங்கள் வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், எங் களுக்கு எங்கும் நிரந்தர வீடு இல்லை. வேலை இருக்கும் வரை யில் பணியாற்றி வாழ்க்கை நடத்து கிறோம். ஆனால், மற்ற இடங்களை விட சென்னையில்தான் 11 ஆண்டு களாக என் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். மழையால் தற்காலிக குடியிருப்பு நாசமாகியுள்ளது. எங்கள் தேவைகளை கேட்க மொழி பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிர்வாகி வெங்கடேசன் வால்டர் ‘தி இந்து’விடம் கூறும் போது, ‘‘இவர்கள் சுமார் 10 ஆண்டு களாக தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு களை இழந்து, வீட்டு உபயோகப் பொருட்களையும் இழந்து தவிக் கின்றனர். அவர்களின் பிள்ளை களில் சிலர் மட்டுமே பள்ளிகளில் படித்து வருகின்றனர். கனமழை யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவுக்கு உதவிகள் கிடைக்கின் றன. ஆனால், இவர்களால் எதுவும் கேட்டு பெற முடியவில்லை. ரேஷன் அட்டை இல்லாதது, மொழி ஆகியவை பிரச்சினைகளாக உள்ளன. ஒரு சில அமைப்புகள் வந்து உணவுப் பொட்டலங்களை மட்டும் வழங்கி வருகின்றனர். ஆனால், இவர்கள் குடும்பம் நடத்த அடுப்பு, பாத்திரங்கள், போர்வை போன்ற எதுவும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் ஓட்டுரிமை இல்லாததால் எந்த அரசியல் கட்சியினரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT