கரோனாவால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் 3 குழந்தைகளை பெற்றெடுத்த வித்யாவுடன், அவரது கணவர். படம்: என்.ராஜேஷ் 
தமிழகம்

கரோனா பாதித்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் மனைவி வித்யா (25). கடந்த மே மாதம் நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வித்யாவின் கல்லீரல் பாதிப்படைந்ததால் குறித்த நாட்களுக்கு முன்பாகவே மே 30-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன. அவருக்கு ஒரே நேரத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

குழந்தைகள் முறையே 1.5 கிலோ, 1.75 கிலோ, 1.3 கிலோ எடை கொண்டதாக இருந்தன. முன்கூட்டியே பிறந்ததாலும், எடை குறைவாக இருந்ததாலும் 3 குழந்தைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

குழந்தைகளுக்கு நவீன கருவி மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. குழந்தைகளின் நரம்பு வழியாக ஆன்டிபயாடிக் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அளிக்கப்பட்டன. குழந்தைகளின் உடல்நிலை முன்னேற்றமடைந்தது. தாயும் குணமடைந்ததால், பிரசவித்து 7 நாட்களுக்கு பிறகு குழந்தைகள் தாயிடம் ஒப்படைக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்கப்பட்டது.

கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவர்களின் தீவிர பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்கு பிறகு குழந்தைகளின் எடை அதிகரிக்கத் தொடங்கியது. தாயும் நல்ல முறையில் குணமடைந்தார். இதையடுத்து தாய் மற்றும் குழந்தைகள் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT