பெண்களை இழிவுபடுத்தும் வகை யில், கேட்கவே அருவருப்பான வகையில் அனிருத் இசைய மைத்து, நடிகர் சிம்பு பாடியுள்ள தாக சொல்லப்படும் பாடல் யூ டியூப் மூலம் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வரிகள் இருப்பதாக கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உட்பட தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கோவையில்
கோவையில் உள்ள மாதர் சங் கத்தினர் கொடுத்த புகாரின்பேரில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் களை ஆபாசமாக சித்தரித்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரு வரும் டிச.18-ம் தேதிக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி தனித் தனியாக சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. இந்நிலையில் தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை முற்றுகையிட்டு கடந்த இரு நாட்களாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருச்சி…
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் பாடிய நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி உறையூர் குறத் தெருவில் நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய மாணவர் பெரு மன்ற மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். அனைத்திந்திய மாதர் சங்க மாநகர செயலாளர் ஆயிஷா முன்னிலை வகித்தார். ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
தஞ்சாவூர்…
தஞ்சாவூர் ரயிலடியில் நேற்று இந்திய தேசிய மாதர் சம்மேள னத்தின் மாவட்டச் செயலாளர் விஜயலட்சுமி தலைமையில் திரண்ட பெண்கள், சிம்புவின் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டிணம்…
பாரதிதாசன் உறுப்பு கல்லூரி, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, தரங்கம்பாடி மாணிக்கம் லுத்தரன் கல்லூரி ஆகிய இடங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, சிம்பு, அனிருத் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் பி.இளங்கோ, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் பி.சுசீலா தலைமை வகித்தனர். நிர்வாகிகள் டி.நாராயணன், டி.சலோமி, என்.தமிழரசன், பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி..
திருநெல்வேலி சந்திப்பு பாரதியார் சிலை முன் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிம்பு, அனிருத் ஆகியோருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.தங்கம், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜகுரு தலைமை வகித்தனர்.
போராட்டத்தின்போது சிம்பு, அனிருத் படம் எரிக்கப்பட்டது. அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவா னது. பின்னர் போராட்டத்தில் ஈடு பட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்…
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் வெளியிட்ட நடிகர் சிம்பு மற்றும் இசை யமைப்பாளர் அனிருத்தை கண் டித்து திருச்செங்கோடு எலச்சி பாளையத்தில் ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது.
மாதர் சங்க மாவட்ட தலைவர் சரோஜா தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் கனகமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சிம்பு மற்றும் அனிருத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இருவரது படங்களையும் துடைப்பம் மற்றும் செருப்புகளால் அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உளுந்தூர்பேட்டை
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் பாடிய சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனி ருத் ஆகியோரின் உருவ பொம்மை மற்றும் படங்களை உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இந்திய வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் எரிக்க முயன்றனர்.
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத் தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய வாலிபர் சங்கத்தினர் சிம்பு மற்றும் அனிருத் ஆகியோரது உருவ பொம்மைகள் மற்றும் படங்களை நேற்று எரிக்க முயன்றனர். அங்கி ருந்த போலீஸார் அவர்களை தடுத்த போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டக் காரர்களிடம் இருந்து சிம்பு, அனிருத் உருவ பொம்மைகளை போலீஸார் பறித்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 30 பேரை கைது செய்தனர்.
சென்னையில் 13 புகார்கள்
சிம்பு மீதான புகார் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிம்பு மீது சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இதுவரை 13 புகார்கள் வந்துள்ளன. அந்தப் பாடல் வெளியான விதம் குறித்து ஏற்கெனவே விசாரணையை தொடங்கிவிட்டோம். பாடலை பதிவேற்றம் செய்தவர்களின் விவரங்களை கேட்டு யூடியூப் நிர்வாகத்துக்கு மெயில் அனுப்பியிருக்கிறோம். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றனர்.
எதையும் சட்டபூர்வமாக சந்திப்பேன்: சிம்பு
யூ டியூப் மூலம் வெளியான ‘பீப்’ பாடல் குறித்து தனது ட்விட் டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சிம்பு, “இந்தப் பிரச் சினையை சட்டபூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளேன். ஓடி ஒளிய மாட்டேன். எனக்கு கடவுள் மேல் நம்பிக்கை உள்ளது. அவர் பார்த்துக் கொள்வார். எனக்கு நேர்மையின் மீதும், உண்மையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.