வணிகர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். கரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடிக்கான வரைவோலை மற்றும் காசோலைகளை வழங்கி, கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில், களத்தில் அரசுடன் துணை நிற்கும், வணிகர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். கரோனா தொற்றின் 2 அலைகளிலும் உயிரிழந்த வணிகர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்க வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறு,குறு வணிகர்களுக்கு அரசு மானியத்துடன் இணைந்த மூலதன நிதியுதவியாக ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பின்றி உள்ள மர்க்கெட் கமிட்டி சந்தைகளை உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் காலத்தில் வணிகர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள விதிமீறல் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
அறநிலையம், நகராட்சி, உள்ளாட்சி கடைகளுக்கு தமிழகம் முழுவதும் ஒரே முறையான வாடகையை வசூலிக்க வேண்டும். சுற்றுலாத் தலங்களில் உள்ள வாடகை மற்றும் வரிவிதிப்பை ஓராண்டுக்கு விலக்கி வைக்க வேண்டும். கருணாநிதி ஆட்சியில் உருவாக்கப்பட்ட வணிகர் நல வாரியத்தில் ஜிஎஸ்டி பதிவு பெறாத வணிகர்களையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.