தமிழகம்

ஆப்கன் தீவிரவாதிகளிடம் சிக்கிய பாதிரியாரை மீட்க உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு வைகோ கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட கொடைக்கானல் கிறிஸ்தவ பாதிரியார் அலெக்சிஸ் பிரேம் குமாரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். கடிதம் அனுப்பியதை, பிரதமர் அலுவலக அதிகாரிகளிடமும் வைகோ தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

அவ அனுப்பியுள்ள கடிதத்தில்: "தமிழகத்தைச் சேர்ந்தவரான கத்தோலிக்க பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்காஸ்தானத்தில் ஹிராட் நகரத்துக்கு அருகில் ஜூன் 2-ம் தேதி தலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார் என்ற செய்தி கடும் அதிர்ச்சியைத் தருகிறது.

பாதிரியார் அலெக்சிஸ் வாழ்நாள் முழுவதும் மனிதாபிமான சேவையை பழங்குடி மக்களுக்கு செய்துவந்துள்ளார். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் மிகுந்த சேவை புரிந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானத்தில் தன் உயிருக்கு ஆபத்து நேருவதையும் பொருட்படுத்தாமல் பழங்குடி மக்களுக்கு குறிப்பாக, ஏழை மாணவர்களுக்கு பள்ளிப் பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வந்துள்ளார்.

அவரது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து நேரிடலாம் என அஞ்சுகிறேன். எனவே ஆப்கானிஸ்தான் அரசு மூலமாக தேவையான தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து, பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்களை மீட்டுத்தர வேண்டும் என இந்தியப் பிரதமரை அன்புடன் வேண்டுகிறேன்"

இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT