தொண்டர்கள், பொதுமக்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களால் சென்னையில் உள்ள பல்வேறு கட்சிகளின் அலுவலகங்கள் நிவாரண முகாம்களாக மாறியுள்ளன.
திமுக தலைவர் கருணா நிதியின் வேண்டுகோளை ஏற்று அக்கட்சியினர் அனுப்பிய நிவாரணப் பொருட்கள், கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குவிந்தன. அவற்றை பாதிக் கப்பட்ட பகுதிகளுக்கு திமுக நிர்வாகிகள் பிரித்து அனுப்பி வைத்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தமிழக காங்கிரஸ் அறக் கட்டளைக்கு சொந்தமான தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது. அங்கு தங்கியிருந்த சுமார் ஆயிரம் பேருக்கு காங்கிரஸ் சார்பில் 4 நாட்கள் உணவு வழங்கப்பட்டது. பாய், போர்வை, பால் பவுடர் போன்ற பொருட்களும் வழங்கப் பட்டன.
சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பி.ராம மூர்த்தி நினைவகத்தில் 3 நாள்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உணவு வழங் கினர்.
தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலால யத்திலும் 3 நாட்களாக உணவு தயாரித்து மக்களுக்கு வழங்கப் பட்டது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு, துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் சென்னையின் பல் வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினர்.
வேப்பேரி பெரியார் திடலில் தி.க. சார்பில் உணவு தயா ரிக்கப்பட்டு கொருக்குப் பேட்டை, பட்டாளம், சிந்தா திரிப்பேட்டை, புதுப்பேட்டை, ராயப்பேட்டை பகுதிகளுக்கு வழங்கப்பட்டன. தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக, பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
பிறமதத்தினரின் நேயம்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவாபாரதி தொண்டு நிறுவனம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், எஸ்.டி.பி.ஐ. போன்ற பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்தவ, ஜெயின் அமைப்புகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தங்கியிருந்தவர்களுக்கு முஸ்லிம்கள் உணவு தயாரித்து வழங்கினர்.