தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் திமுக- அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு, 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கோமதி இருந்து வருகிறார். இந்த ஒன்றியத்தில் அதிமுக 7, திமுக 5, அமமுக 2, புதிய தமிழகம் 1, சுயேச்சை 1 என மொத்தம் 16 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த இசக்கிதுரை என்பவர் தலைவராகும் முயற்சியில் அதிமுக உறுப்பினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதையறிந்த கோமதி, ராஜேந்திரன் உட்பட 18 பேர் நேற்று முன்தினம் இரவு 10-வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஆழிக்குடி கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகையா மகன் சுடலைமுத்து என்பவரின் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து நடந்த மோதலில் சுடலை முத்துவின் உறவினர் கிருஷ்ணன் (60), முருகையா மகன் சிவராமன் (37), தளபதி மகன் முண்டசாமி (30), அர்ஜூனன் மகன் மகராஜன் (35) ஆகிய 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மேலும், வீட்டில் இருந்த டிவி, ஃபிரிட்ஜ், கார் உள்ளிட் டவை அடித்து நொறுக்கி சேதப்படுத்தப் பட்டன. இதில், காயமடைந்த 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இதுகுறித்து முறப்பநாடு போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து, கோமதியின் ஆதரவாளரான மணக்கரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (30), ஆழிக்குடி சங்கர் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். கோமதி, ராஜேந்திரன் உட்பட 16 பேரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.