தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதி கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க பரம்பிக்குளம் ஆழியாறு புதிய திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி அருகேயுள்ள வயலூர், தாளையூத்து, போதுப்பட்டி, கீரனூர், மேல்கரைப்பட்டி, பூலாம்பட்டி ஆகிய கிராமங்களில் கரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணையாக ரூ.2000, 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாலையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராசு தலைமை வகித்தார். மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் முருகேசன், மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வழங்கி உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:
"நீங்கள் அளித்த தொடர் வெற்றியால் அமைச்சர் பதவியை வழங்கி தமிழக முதல்வர் எனக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர் வெற்றி அளித்த மக்களுக்கு என்றும் பிரதிபலன் எதிர்பாராமல் சேவை செய்யக் காத்திருக்கிறேன்.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதி கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க புதிய கூட்டுக் குடிநீர் திட்டமான பொள்ளாச்சி பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டுவர ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வுப் பணிகள் முடிந்தபிறகு புதிய குடிநீர் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகள், பழநி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகள் பயன்பெறவுள்ளன.
இதன் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவுள்ளது. அரசு வழங்கும் கரோனா நிவாரண நிதி ரூ.2000 மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,49,083 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ளனர். இதற்காக ரூ.129.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
பழநி கோட்டாட்சியர் ஆனந்தி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.