காதலர் தினமும், சீனப் புத்தாண்டும் ஒரே வாரத்தில் வருவதால் சர்வ தேச சந்தைகளுக்கு சீன ரோஜா மலர்களின் ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளது.
அதனால், இந்திய ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
காதலர் தினத்தின் அடையாள மாக ரோஜா மலர் கருதப்படுகிறது. அன்றைய தினம் காதலர்கள் ரோஜா மலர்களை பரிமாறிக் கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துவர். அதனால், சாதாரண நாட்களில் ரூ.5, ரூ.10-க்கு விற்கும் ரோஜா மலர்கள் அன்று அதிக விலைக்கு விற்கப்படும். இதனால், காதலர் தினத்தை மனதில் வைத்து விவ சாயிகள் அதிகளவில் ரோஜா மலர்களை அறுவடை செய்வர்.
சர்வதேச அளவில் சீனா, கென்யா, ஈக்வெடார் மற்றும் இந் தியா உள்ளிட்ட நாடுகளில் ரோஜா மலர்களின் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது.
இந்தியாவை ஒப்பிடும்போது மற்ற நாடுகளில் ரோஜா மலர்கள் தரமாகவும், அதிகளவிலும் உற்பத்தியாகின்றன. இந்திய ரோஜா மலர்கள் மூன்றாம் தர மலர்களாகவே சர்வதேச சந்தையில் கருதப்படுகின்றன. அதனால், சர்வதேச சந்தைகளில் சீனா, கென்யா, ஈக்வெடார் ஆகிய நாடுகளில் உற்பத்தியாகும் மலர் களுக்கே முதல் வரவேற்பு இருக்கிறது. அதன்பின்பே இந்திய ரோஜாக்களுக்கு வரவேற்பு கிடைக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்துடன் சீனப் புத் தாண்டும் ஒரே வாரத்தில் வருகின் றன. இதனால், சீனாவிலேயே ரோஜா மலர்களுக்கு உள்நாட்டு தேவை பலமடங்கு அதிகரித்து காணப்படும். அதனால், சர்வதேச சந்தைகளுக்கு சீன ரோஜாக்களின் வரத்து பெருமளவு குறைய வாய்ப் புண்டு. இதனால், இந்திய ரோஜா மலர்களுக்கு சர்வதேச சந்தையில் வரவேற்பு கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தில் இருந்து வெளிநாடு களுக்கு அதிகளவு ரோஜாக்களை ஏற்றுமதி செய்யும் வகையில், வெளிநாட்டு ஏற்றுமதியை எளிமை யாக்கித் தர வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஓசூர் குடிசெட் லுவை சேர்ந்த வெளிநாட்டு ஏற்று மதி ரோஜா விவசாயி சிவா கூறிய தாவது: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உட்பட பரவலாக ரோஜா சாகுபடி நடைபெற்றாலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக் கோட்டை தாலுகாக்களில்தான் அதிகளவு ரோஜா மலர்கள் சாகு படி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு இங்கு பசுமைக் குடில் (கிரீன் ஹவுஸ்) முறையில் மட்டும் காதலர் தினத்துக்காக 700 ஏக்கரில் காதலர் தின ஏற்றுமதி ரக ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பிப்.1 முதல் 10-ம் தேதி வரை காதலர் தினத்துக் காக விவசாயிகள் செடிகளில் ரோஜா மலர்களை பறிப்பார்கள். ஏக்கருக்கு 80 ஆயிரம் பூக்கள் வீதம் 700 ஏக்கரில் 5 கோடியே 60 லட்சம் மலர்கள் அறுவடையாகும். இவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைக்கு பயன்படும்.
இதேநேரத்தில் தமிழகம் முழு வதும் ஒட்டு மொத்த விவசாயி களுக்கும் காதலர் தினத்துக்காக ஒரே நேரத்தில் பூக்களை அறுவடை செய்ய காத்திருப்பதால் சந்தைகளுக்கு மலர்களின் வரத்து அதிகமாகும்.
இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு பிப்.8-ம் தேதி வருகிறது. காதலர் தினம் அடுத்த சில நாட்களில் வருவதால், சீன விவசாயிகள் புத்தாண்டுக்காக ரோஜா மலர்களை பறித்துவிடுவர். அதனால், சர்வ தேச சந்தைகளில் காதலர் தினத் தில் சீன ரோஜா மலர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். இதனால், நமது வேளாண் அதிகாரிகள் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முன் னேற்பாடுகளில் ஈடுபட வேண்டும் அவர் கூறினார்.