தமிழகம்

ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்ற 206 பேரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வீரமணி கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்ற 206 பேரையும் உடனடியாக அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''இந்து ஆலயங்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘‘ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் ரத்து செய்யப்படவில்லை. எந்தக் குழப்பமும் இல்லாமல் மிகத் தெளிவாகவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளனது. எனவே, இதனை திராவிடர் கழகம் முழுமையாக வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பில் எந்தக் குழப்பமும் இல்லை.

எனவே, கடந்த 2006-ல் ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்ற 206 பேரையும் உடனடியாக இந்து ஆலயங்களில் அர்ச்சகர்களாக நியமிக்க இந்து அறநிலையத் துறை மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் திராவிடர் கழகம் போராட்டங்களை நடத்தும்.

மனித உரிமை காக்கப்பட வேண்டும், தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்தக் கோரிக்கையை திராவிடர் கழகம் முன்வைக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT