தமிழகம்

அரசின் கரோனா தடுப்பூசி முகாமில் பாஜக கொடிகளைக் கட்ட எதிர்ப்பு: பேரவைத் தலைவரிடம் உரிமை மீறல் புகார் தர காங். எம்எல்ஏ முடிவு

செ. ஞானபிரகாஷ்

கரோனா தடுப்பூசி முகாமில் பாஜக கொடிகளைக் கட்டப் புதுச்சேரியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸார் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி பேரவைத் தலைவரிடம் உரிமை மீறல் புகார் தர காங்கிரஸ் எம்எல்ஏ முடிவு செய்துள்ளார்.

புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. லாஸ்பேட்டையில் குறிஞ்சி நகர், ஜீவானந்தபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாகத் தடுப்பூசி முகாம் நடந்தது. இப்பகுதியில் பாஜகவினர் பேனர்களை வைத்துக் கொடிகளையும் கட்டினர்.

பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் முகாமைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று காலை செல்லப் பெருமாள்பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கும் பாஜகவினர் கட்சிக் கொடிகளைக் கட்டி பேனர் வைத்திருந்தனர். பணியிலிருந்த ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினர், சுகாதாரத்துறை ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் ஆதரவாளர்களோடு முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எம்எல்ஏ வைத்தியநாதன் தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து எம்எல்ஏ வைத்தியநாதன் கூறுகையில், "லாஸ்பேட்டை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் தோல்விடைந்துள்ளார். ஏற்கெனவே குறிஞ்சி நகர், ஜீவானந்தபுரம் பகுதிகளில் நடந்த முகாமில் பாஜகவினர் நடத்துவது போல கட்சிக் கொடி, பேனர் வைத்திருந்தனர். தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர் முகாமைத் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். பாஜக வெற்றி பெற்ற 6 தொகுதிகளில் தோல்வியடைந்த காங்கிரஸ், திமுகவினர் முகாம்களைத் தொடங்கி வைக்கலாமா? அரசு நடத்தும் விழாவை பாஜக நடத்தும் விழாபோல காட்டிக்கொள்கின்றனர். பேரவைத் தலைவரிடம் இது தொடர்பாக உரிமை மீறல் புகார் தெரிவிக்க உள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT