தமிழகம்

முக்கொம்பு அணைக்கு வந்தது காவிரி நீர்; இரவுக்குள் கல்லணையை அடையும்

ஜெ.ஞானசேகர்

மேட்டூர் அணையில் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்ட காவிரி தண்ணீர், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் முக்கொம்பு அணையை வந்து சேர்ந்தது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைக் கடந்த ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அணைக்கு நேற்று மாலை தண்ணீர் வரத்து வினாடிக்கு 892 கன அடி வீதம் உள்ள நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று (ஜூன் 14) அதிகாலை 3 மணியளவில் மாயனூர் தடுப்பணையையும், அதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் முக்கொம்பு அணையையும் வந்து சேர்ந்தது. இந்த நிலையில், முக்கொம்பு அணைக்குத் தண்ணீர் வரத்து இன்று காலை 6 மணியளவில் வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்தது. இந்தத் தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

நீர்வள ஆதாரத் துறையின் உதவிச் செயற்பொறியாளர் ஜெயராமன், உதவிப் பொறியாளர்கள் ராஜரத்தினம், கோபிகிருஷ்ணன், இளநிலைப் பொறியாளர்கள் ஆறுமுகம், அறிவொளி ஆகியோர் தண்ணீரைத் திறந்து வைத்து, மலர்கள் மற்றும் விதைகளைத் தூவி வணங்கினர்.

இந்த நிகழ்வில் விவசாயச் சங்க நிர்வாகிகள் சிவசூரியன், பூ.விசுவநாதன், நடராஜன், ராஜலிங்கம், துரை, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், நீர்வள ஆதாரத் துறை அலுவலர்கள் கூறும்போது, “முக்கொம்பு அணைக்குத் தண்ணீர் வரத்து படிப்படியாக உயரும். முக்கொம்பில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இன்று இரவுக்குள் கல்லணையைச் சென்றடையும். பாசனத்துக்காக நாளை காலை கல்லணையில் இருந்து அமைச்சர்கள் உள்ளிட்டோர் தண்ணீரைத் திறந்து வைக்கவுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT