தமிழகம்

திருவள்ளூர் அருகே கோயிலில் நேர்ந்த சோகம்: மண்டப மேற்கூரை இடிந்து 10 வயது சிறுமி பலி - வெவ்வேறு விபத்துகளில் மேலும் மூவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் அருகே கோயிலில் இருந்த சிமெண்ட் சிலாப் விழுந்ததில் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சி புரம் மாவட்டத்தில் நடந்த மேலும் சில விபத்துகளில் மூவர் பலியாகினர்.

திருவள்ளூர் அருகே உள்ள பேரம்பாக்கம் - எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த குருமூர்த்தி-சரளா தம்பதியினருக்கு யமுனா(10) என்ற மகள், மதன் சுப்ரமணி(6) என்ற மகன் என, இரு குழந் தைகள் இருந்தனர். யமுனா பேரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், மதன் சுப்ரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று முன் தினம் குருமூர்த்தி குடும்பத்துடன் பேரம் பாக்கம் சோளீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார்.

சுவாமி தரிசனம் முடிந்து அனைவரும் கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். பின்னர் கோயிலின் முன் பகுதியில் உள்ள மண்டபத்தில் உள்ள தங்கள் உடை மைகளை எடுக்க யமுனா சென்றார்.

அப்போது, மழையின் காரணமாக மண்டபத்தின் வெளிபுறத்தில் உள்ள சிமெண்ட் சிலாப் போன்ற மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து, யமுனா மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யமுனா உயிரிழந்தார். மப்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பலி

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் பாலாஜி (16). பெரியஒபுலாபுரத்தில் பாட்டி வீட்டில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று பெத்திக்குப்பத்துக்கு வந்தவர் தனது நண்பர்களான குருபிரகாஷ்பதி(14), கோசலைராமன்(12) ஆகியோருடன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார்.

அங்கு அரசு நூலகம் கட்டுமானப் பணி நடந்துக் கொண்டிருக்கும் பகுதியில் 3 பேரும் சைக்கிள்களில் சென்று கொண்டி ருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்திலிருந்து நூலக கட்டு மானப்பணிக்காக குறைந்த உயரத்தில் செல்லும் தற்காலிக மின் ஒயரில் பாலாஜி சென்ற சைக்கிள் சிக்கியது. இதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரைக் காப்பாற்றச் சென்ற மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண் பலி

இதேபோல், கூவத்தூர் அடுத்த தேவணம்பட்டினம் பகுதியில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை, மிதித்ததில் பெண் ஒருவர் நேற்று பலியானார். கூவத்தூர் அடுத்த தேவணம்பட்டினம் காலனி பகுதியை சேர்ந்தச் ஆறுமுகம் மனைவி மல்லிகா(55). தேவணம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.

இதில், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஆறுமுகம் வீட்டிற்கு செல்லும் சாலையிலிருந்த மரம் ஒன்று சாய்ந்து, எதிர்திசையில் இருந்த மின்கம்பிகள் மீது விழுந்ததில், மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன.

இந்நிலையில், அதிகாலை பால் வாங்கு வதற்காக சாலையில் நடந்து சென்ற மல்லிகா, அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கூவத்தூர் போலீஸார் மற்றும் மின்சார வாரியத்தினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீரில் மூழ்கி மரணம்

காஞ்சிபுரம் அடுத்த சாலபோகம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் பிரகாஷ்(27). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நண்பர்கள் சிலருடன் வேகவதி ஆற்றில் நேற்று குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, ஆற்றில் தேங்கியிருந்த சகதியில் சிக்கினார். இதனால், உடலை அசைக்க முடியாமல் தண்ணீரில் முழ்கி பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சகதியில் சிக்கியிருந்த உடலை மீட்டனர். காஞ்சி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT