தமிழக அரசுக்கு எதிராகத் தான் பதிவிட்டதாக போலி ட்விட்டரை உருவாக்கி அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின்பேரில் உடனடியாக ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் செல்வாக்குமிக்க நகைச்சுவை நடிகராக விளங்கிய செந்தில், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்தார். அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகத் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் டிடிவி தினகரன் தலைமையை ஏற்று அமமுகவுக்குத் தாவினார். சமீபத்தில் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார்.
தேர்தலுக்குப் பின்னர் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதை நடிகர் செந்தில் கண்டித்ததாக செய்தி பரவியது.
மக்கள் உயிரைக் காக்க வேண்டிய நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடை அவசியமா? என்று கேட்டு செந்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்ததாக செய்தி வெளியானது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கை உருவாக்கி முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்தைப் பதிவிட்டு, எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ள விஷக்கிருமிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அந்தப் பதிவுகளை நீக்க வேண்டும் என புகாரில் கோரியிருந்தார்.
இந்நிலையில் அந்த ட்விட்டர் கணக்கை நீக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“திரைப்பட நடிகர் செந்தில் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரில், தன் பெயரில் சமூக வலைதளத்தில் எந்த ஒரு கணக்கும் தனக்கு இல்லை என்றும், ஆனால் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த ஜூன் 12 அன்று தன் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி ட்விட்டர் இணையதளத்தில் போலியான கணக்கை உருவாக்கி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தான் பதிவு செய்ததுபோல் தமிழக அரசின் மீதும், தமிழக முதல்வர் மீதும் அவதூறான கருத்துகளை, போலியான பதிவுகளைப் போடுகிறார்கள் என்றும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீஸார் ட்விட்டர் இணையதளத்திற்குப் போலிக் கணக்கை நீக்கம் செய்யக் கோரி முறையீடு அனுப்பியது. அதையடுத்து அந்த போலி ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டது. மேற்படி போலியான கணக்குகளை உருவாக்கிய நபர்கள் யார் எனக் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் யாரும் போலியான கணக்குகளைப் பின்தொடர்ந்து ஏமாற வேண்டாம் என்றும், உண்மையான ஐடி தானா என்பதை உறுதி செய்தபிறகு பின்தொடர வேண்டும் என்றும் சென்னை காவல்துறை கேட்டுக்கொள்கிறது”.
இவ்வாறு சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.