தமிழகம்

குற்றவாளி திருவண்ணாமலையில் சிக்கினார்: சென்னையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு - குழந்தை இல்லாதவர்களுக்கு விற்க திருடியதாக வாக்குமூலம்

செய்திப்பிரிவு

அயனாவரத்தில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை திருவண்ணாமலையில் மீட்கப் பட்டது. குழந்தையை கடத்திய வரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம் புதிய ஆவடி சாலை குடிநீர் தொட்டி அருகே சாலை ஓரத்தில் கார்த்திக் - குப்பம்மாள் தம்பதி வசிக்கின்றனர். இவர்களின் 3 வயது மகள் பவித்ரா. இவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். சாலை ஓர நடைபாதையிலேயே இரவிலும் தூங்குவார்கள். கடந்த 14-ம் தேதி இரவும் வழக்கம்போல நடைபாதையில் தூங்கினர். 15-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் குப்பம்மா எழுந்து பார்த்தபோது பவித்ராவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கும், குப்பம்மாவும் மகளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நள்ளிரவு ஒரு மணியளவில் குப்பம்மா எழுந்தபோது அருகில் பவித்ரா தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அதன் பின்னர் வந்த யாரோ குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து அயனாவரம் போலீ சில் புகார் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து குழந் தையை தேடிவந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி போலீஸார், சென்னை போலீஸாரை தொடர்பு கொண்டு, சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை பவித்ரா தங்களிடம் இருப்பதாகவும், குழந்தையை கடத்திய நபரை பிடித்து வைத்திருப்பதாகவும் கூறினர். மீட்கப்பட்ட குழந்தையின் புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைக்க, மீட்கப்பட்டது பவித்ராதான் என்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அயனாவரம் போலீஸார் திருவண்ணாமலை சென்று குழந்தை பவித்ரா மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் ஆகியோரை நேற்று காலையில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

குழந்தை மீட்கப்பட்டது எப்படி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கிடப்பாளையம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(35). பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தை முனுசாமி, விபத்தில் சிக்கி காயம் அடைந்து சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக ரமேஷ் வந்தார். 15-ம் தேதி அதிகாலையில் கோயம்பேடு செல்வதற்காக புதிய ஆவடி சாலை வழியாக நடந்து சென்றார்.

அப்போது பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பவித்ராவை யாருக் கும் தெரியாமல் தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென் றிருக்கிறார். குழந்தையுடன் ரமேஷ் வீட்டுக்கு வந்திருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ரமேஷையும், குழந்தையையும் கடலாடி போலீ ஸில் ஒப்படைத்துள்ளனர்.

குழந்தை கடத்தல் வழக்கில் ரமேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தை இல்லாதவர்களுக்கு பவித்ராவை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க கடத்தியதாக ரமேஷ் வாக்குமூலத்தில் கூறி யிருக்கிறார். அவருக்கு வேறேதும் கடத்தல் வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT