கடலூர் அருகே திருவந்திபுரம் கோயில் முன்பு உள்ள சாலையில் எராளமான திருமணங்கள் நடைபெற்றன.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோயில் உள்ளது. இது 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்குள்ள மலையில் உள்ள கோயில் திருமணக்கூடத்தில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300 திருமணங்கள் வரை நடைபெறும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கோயில் திருமணக்கூடத்தில் திருமணம் நடத்த அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி கோயிலை சுற்றியுள்ள தனியார் திருமண மண்டபங்களில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் ஏற்கெனவே அனுமதி பெற்று தற்போது திருமணங்களை நடத்தி வருகின்றனர். தளர்த்தப்பட்டஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று தேவநாதசாமி கோயில்முன்பு உள்ள சாலையில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.
மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்களிலும் திருமணம் நடைபெற்றது. கோயில் முன்பு உள்ளே செல்ல முடியாதபடி போலீஸார் தடுப்பு அமைத்திருந்தனர். அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸார் பொதுமக்களிடம், முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பாதுகாப்பாக திரு மணத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.