கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழை காரணமாக, வெள்ள கட்டுப்பாட்டு அறைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று காலை வரை விடிய, விடிய பெய்த மழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடலூர் நகரில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. ராம்நகர், சுப்பராயலு நகர், நீதிபதிகள் குடியிருப்பு, தானம் நகர், மஞ்சக்குப்பம் கேசவநகர் ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. ராம் நகரில் இடுப்பளவுக்கு மேலும் தண்ணீர் தேங்கியது. கோண்டூர் பகுதியில் மக்களை படகுகள் மூலம் தீயணைப்பு படையினர் மீட்டு அப்புறப்படுத்தினர்.
கடலூர் அருகே உள்ள எம்.பி. அகரத்தில் ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் பாய்ந்து, நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கெடிலம் ஆறு, தென்பெண்ணை ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீராணம், பெருமாள் ஏரிகள் நிரம்பி வருகிறது. வடக்கு ராஜன் வாய்க்கால், கான்சாகிப் வாய்க்கால், வெள்ளாறு, பரவனாறு உள்ள நீர்நிலைகளில் அதிகளவு மழைநீர் செல்கிறது. எனவே, கரையோர பகுதி மக்கள் வெளியேறும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 36 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி முகாமுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தயார் நிலையில் மீட்புக் குழுவினர்
விசூர், பெரிய காட்டுப்பாளையம், கல்குணம், பூதம்பாடி ஆகிய கிராமங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். நீர்நிலைகளில் ஏற்படும் உடைப்புகளை தடுக்க ஆங்காங்கே 80 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 300 மீட்பு படையினர் படகுகளுடன் தயாராக உள்ளனர். மழை பாதிப்புகளை கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலம்
திட்டக்குடி எல்லையில் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி உடைந்து வெள்ள சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதா எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் திட்டக்குடி போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும் பொதுப்பணித்துறை ஊழியர்களிடம் வெலிங்டன் ஏரியில் குளிக்க அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
ராமநத்தம் காவல் ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீஸார் ராமநத்தம் அணைகட்டின் பாதுகாப்பை உறுதி செய்தனர். தொடர்ந்து நீர்வரத்து குறித்து பாசன ஆய்வாளர் மூர்த்தியிடம் கேட்டிறிந்தனர். வேப்பூர் ஆய்வாளர் சுப்புராயுலு தலைமையிலான போலீஸார் மேமாத்தூர் அணைகட்டில் ஆய்வு செய்தனர். இதேபோல் பெண்ணாடம் ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் பெலாந்துறை அணைகட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.