தமிழகம்

மன்னர்கள் காலத்து நீர்நிலைகளை மீட்டு புனரமைப்பது அவசியம் - ‘நீர்மனிதன்’ ராஜேந்திர சிங் நேர்காணல்

ஆர்.ஷபிமுன்னா

வெள்ளம், வறட்சியை சமாளிக்க மன்னர்கள் காலத்து நீர்நிலைகளை மீட்டு புனரமைக்க வேண்டும் என்கிறார் ‘நீர் மனிதன்’ ராஜேந்திர சிங். மகசேசே மற்றும் பிபிசி விருதுகளைப் பெற்றவரான இவர், ‘தருண் பாரத் சிங்’ என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி ராஜஸ்தான் மாநில கிராமங்களில் நீர்நிலைகளை பாதுகாத்து வருகிறார். தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள், அதற் கான காரணங்கள், இனி இது போன்ற பேரழிவு ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக் கைகள், இதில் நம் அனைவரின் பங்கு என பல அம்சங்கள் குறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பெய்த அதிகப்படியான மழை குறித்து தங்கள் கருத்து என்ன?

தமிழகத்தில் ‘சிவப்பு வெப்பம்’ (ரெட் ஹீட்) அதிகமாகிவிட்டது. சென்னை கடலோர நகரம் என்பதால் அங்கு ஏற்கனவே ‘நீல வெப்பம்’ (புளு ஹீட்) நிலவுகிறது. இவை இரண்டுக் கும் இடையே மோதல் உரு வாகும்போது பெருமழை கொட்டுகிறது. ஆனாலும், இந்த மழைகூட குறைவுதான். இதையே சமாளிக்க முடியாமல் போனது நீர் மேலாண்மையில் இருக்கும் அலட்சியத்தை காட்டு கிறது. பல ஆண்டுகளாக தூர்வாரா மல் விட்டதால் சேர்ந்துகொண்ட அடைப்புகள், கட்டிட ஆக்கிரமிப்பு கள்தான் இதற்கு காரணம். உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த அரசுகளும் முன்வரவில்லை.

இந்த வெள்ளப் பெருக்கை தடுத் திருக்க முடியுமா?

இதை தடுத்திருக்க வேண்டியது அரசின் பொறுப்பு. மழை, வெள் ளத்தை கருத்தில் கொண்டு பாது காப்பு முன்னேற்பாடுகள் செய்தி ருக்க வேண்டும். 100 ஆண்டு களுக்கு எத்தகைய இயற்கை சீற்றங்கள் வந்தாலும் சமாளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இதை செய் யாததே சென்னை, கடலூர் வெள் ளத்துக்கு காரணம்.

இந்த மழையை குறைவு என்கிறீர்கள். இதைவிட வேறு எங்கும் அதிகமாக பெய்துள்ளதா?

இதைவிட பல மடங்கு அதிக மழை ராஜஸ்தானில் பெய்தது. எவ்வளவு மழை என்பதைவிட அதன் அடர்த்திதான் முக்கியம். பார்மரில் 2009-ல் 3 மணி நேரத்தில் 34 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. பரத்பூரில் 1996-ல் ஒரு மணி நேரத்துக்குள் 14 செ.மீ. மழை கொட்டியது. அப்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டாலும் சென்னைபோல பெரிய அளவில் சேதம் இல்லை.

ஆறு, ஏரியின் ஓரங்களை ஆக்கிரமித்து புதிதாக கட்டப் பட்டிருந்த வீடுகள் மட்டுமே மூழ்கின.

இனி என்ன செய்ய வேண்டும்?

வெள்ளமும், வறட்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. வெள்ளத்தில் இருந்து தப்ப நீர்நிலைகள் அழியாமல் காக்க வேண்டும். முக்கியமாக, மன்னர்கள் காலத்தில் இருந்த நீர்நிலைகளைக் கண்டுபிடித்து அவற்றை புனரமைக்க வேண்டும். நீர்நிலைகளை அவற்றின் அளவு மற்றும் வரைபடங்களுடன் அரசு ஆவணங்களில் பதிவு செய்வது அவசியம்.

இயற்கை பேரிடர்களை சமாளிப் பதில் வட இந்திய, தென் இந்திய மாநிலங்கள் இடையே ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

வட இந்தியாவில் நதிகள் அதிகம். மழையால் வெள்ளப் பெருக்கு அடிக்கடி நிகழ்வதால் அவர்களுக்கு அதன் பாதிப்புகள் தெரியும். பலமுறை இதை எதிர் கொண்ட அனுபவம் இருப்பதால், சேதம் அவ்வளவாக இருக்காது. தென் இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் அவ்வளவாக ஏற்பட்ட தில்லை என்பதால், அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் மூலம் அண்டை மாநிலங்களும் பாடம் கற்பது முக்கியம்.

உலக அளவில் நிகழ்ந்து வரும் இயற்கை மாற்றங்களை சமாளிக்க அரசு, பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங் களையும் நாம் சீராக பாதுகாக்க வேண்டும். தவறினால் அவற்றில் கலப்பு நிகழ்ந்து, மோசமான இயற் கைச் சீற்றங்கள் நேரிடும். இதில் நீரின் பங்கு மிக முக்கியமானது. இதன் முக்கியத்துவம் கருதி ‘தி இந்து’ மற்றும் பல்வேறு அமைப்பு கள், அரசு சாரா நிறுவனங்கள் எடுத் துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது.

(இணைவோம்.. இணைப்போம்..)

சென்னையின் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவரா நீங்கள்? வரும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு பெறலாம். உங்கள் விருப்பத்தை ‘yadhum.in' என்ற இணையத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு 90256 01332, 73586 86695 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT