தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பெரிய மாநகராட்சியாக மதுரை திகழ்கிறது. 100 வார்டுகளில் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
வைகை ஆற்றின் படுக்கையில் அமைந்துள்ள மற்ற மாநகராட்சிகளுக்கு இல்லாத 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரலாற்றையும், பாரம்பரியத்தையும் மதுரை மாநகராட்சி பெற்றிருந்தாலும் சுகாதாரத்தில் தேசிய அளவில் 201 இடத்திற்கு பின்தங்கியுள்ளது.
மதுரையின் பிரதான நீர் ஆதாரமான வைகை ஆற்றில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவு நீரும், சாக்கடை நீரும் கலப்பதால்
தற்போது நிரந்தரமாக கழிவுநீரோடையாக மாறியுள்ளது. உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில், சுற்றுலாப்பயணிகளை சுண்டி இழுக்கும் திருமலை நாயக்கர் மகால், இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் காந்தி மியூசியம், அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் மதுரை மாநகராட்சிப்பகுதியில் அமைந்துள்ளன.
ஆனாலும், மதுரையின் மாசு, சுகாதாரசீர்கேடு, குறுகலான குண்டும், குழியுமான மோசமான சாலை, திரும்பிய பக்கமெல்லுாம் குவிந்து கிடக்கும் குப்பைகள் போன்றவை சுற்றுலாப்பயணிகள் வருகைக்குக்கும், மதுரையின் நவீன கால வளர்ச்சிக்கும் மிகப்பெரிய தடையாக நிற்கிறது.
கடைகள் வாடகை, சொத்து வரி, தொழில் வரி, குத்தகை வரி உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் வாயிலாக ஆண்டிற்கு ரூ.380 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் இதுவரை சரியாக பயன்படுத்தப்படவில்லை. அதனால், சில சமயங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் போட கூட முடியாமல் மாநகராட்சி நிதி நெருக்கடியில் திணறுகிறது.
மதுரை மாநகரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 50 ஆண்டுகளாகிவிட்டாலும் இன்னும் பெரிய வளர்ச்சியடையாமல் அனைத்து நிலைகளிலும் பின்தங்கிய நிலையிலே உள்ளன.
மதுரையின் நீண்ட காலப்பிரச்சினையாகவும், தீர்க்கப்படாத சவாலான பிரச்சினையாகும் மாநகராட்சியின் சுகாதார சீர்கேடு முதல் இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வார்டுகளிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் பற்றாக்குறையால் குப்பை மேலாண்மையை கண்காணிக்க ஆட்கள் இல்லை.
தினமும் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிப்பதில்லை. அதனால், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் சாலையோரங்கள், தெருக்களில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அவை நிரம்பி வழியும் வரை குப்பைகளை எடுக்க வருவதில்லை. ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், குப்பைகளை இரவோடு இரவாக வைகை ஆற்றங்கரையோரங்கள், ஓடைகளில், நகர்ப்புற மழைநீர்கால்வாய்களில் கொட்டி செல்கின்றனர்.
சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு இணையாக பஸ்களும், பயணிகளும் வந்து செல்லும் ஐஎஸ்ஐ தரச்சான்று பெற்ற மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் பயணிகள் அவசரத்திற்கு செல்வதற்கு இலவச கழிப்பிட அறைகள் இல்லை. மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை மூடியே கிடக்கிறது. கட்டண கழிப்பறைகள் செயல்பட்டாலும் அவை சரியாக பராமரிக்கப்படுவதில்லை.
மாநகராட்சி 100 வார்டுகளிலும் குப்பையை உரமாக்கும் திட்டம் கடந்த 2 ஆண்டிற்கு முன் தொடங்கப்பட்டது. அப்படி சேகரிக்கப்பட்ட குப்பைகள் சேகரித்து வெள்ளக்கல் உரக்கிடங்கிற்கு கொண்ட செல்லப்பட்டு டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
குப்பையில் இருந்து தயாரித்த உரங்களை வாங்க ஆளில்லாமல் தேங்கி கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தவும் வழியில்லாமல் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி குடிநீர் பிரச்சினையை தீர்க்க பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தை மேற்கொண்டிருந்தாலும் தற்போது வரும் குடிநீர், பெரும்பாலான வார்டுகளில் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
கடந்த 35 ஆண்டுக்கு போடப்பட்ட பாதாள சாக்கடை பராமரிப்பு இல்லாமல் உடைந்து குடிநீருடன் கலக்கிறது. அந்த குடிநீரை பயன்படுத்தும் மக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம், கடந்த 3 ஆண்டாக ஆமை வேகத்தில் நடக்கிறது. வைகை ஆறு பாலங்கள், பெரியார் பஸ்நிலையம் பணிகள் முடிக்கப்படாமல் மதுரையின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனால், பொலிவு பெறுவதாக கூறப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் மதுரையின் சாலைகள் பாழாகி போனதுதான் மிச்சம். மாநகராட்சி ஆணையாளர் முன் உள்ள இந்த தீர்க்கப்படாத பிரச்சினைகள் மிகப்பெரிய சவால்களாக உள்ளன.
அவற்றை தீர்க்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.