கோயில்கள் விஷயத்தில் திமுவுக்கு உண்மையாகவே ஆர்வம் இருக்கிறதா என சந்தேகம் ஏற்படுவதாக, கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கோவையில் இன்று (ஜூன் 14) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப் பயிற்சி அளிப்பது, பெண்களும் அர்ச்சகராகலம் ஆகிய அறிவிப்புகளை அறநிலையத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக விஷ்வ இந்து பரிஷத் சார்பாக நீண்ட காலமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழில் அர்ச்சனை தற்போதும் கோயில்களில் நடைபெற்று வருகிறது. யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் தமிழில் அர்ச்சனை செய்துகொள்ளலாம்.
ஏற்கெனவே, மேல்மருவத்தூர் மற்றும் ஒரு சில சமுதாயக் கோயில்களில் பெண்கள் பூஜை செய்து வருகின்றனர். பேரூர் ஆதீனம், பெண்களுக்கு ஆன்மிகப் பயிற்சி அளித்து, அவர்கள் கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர்.
இதில், தமிழக அரசு எதையும் புதிதாகச் செய்யவில்லை. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆகமக் கோயில்களில் ஆகம விதிப்படிதான் பூஜை செய்ய வேண்டும். இதில், பக்தர்களின் உணர்வு, கோயில் நிர்வாகத்தின் ஆலோசானையின்படி கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
இந்துக்களுக்கும், இந்துக் கடவுள்களுக்கும் எதிரானவர்கள் திமுகவினர் என நான் சொல்லவில்லை. அக்கட்சியின் தலைவர்களே சொல்லி இருக்கின்றனர். எனவே, கோயில்கள் விஷயத்தில் திமுக அரசு காட்டும் முனைப்பு தன்னிச்சையானதா, உண்மையாகவே இவர்களுக்கு ஆர்வம் இருந்து செய்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஏனெனில், அவர்களின் கடந்த கால வரலாறு அப்படி. தமிழக அரசு உண்மையாகவே இந்துக் கோயில்களின் மீது அக்கறை இருந்தால், கோயில் சொத்துகள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடம் இருந்து மீட்க வேண்டும்.
இந்துக் கோயில்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் இருக்கும் ஆதினங்கள், மடாதிபதிகள் ஆகியோரிடம் பேசி நம்பிக்கை ஏற்படுத்தி, எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டும்".
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.