புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவித்தும், ஆளுநர், அரசு கண்டுகொள்ளாததால் கல்வித்துறையை திமுக இன்று முற்றுகையிட்டது. அதேபோல் காமராஜர் சிலையருகே சுயேச்சை எம்எல்ஏக்களும் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் முழுக் கல்விக் கட்டணத்தைக் கடந்த ஆண்டு முதல் வசூலித்து வருவது தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் புகார் அளிக்கப்பட்டும், கல்வித்துறைச் செயலர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரி அரசும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இக்கட்டண வசூலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டங்கள் நடந்தன.
திமுக போராட்டம்
கரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் முழுமையான கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து புதுவை தெற்கு மாநிலத் திமுக சார்பில் பள்ளிக் கல்வித்துறையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு, தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் சிவா எம்எல்ஏ பேசுகையில், "தனியார் பள்ளிகள் கரோனா ஊரடங்கு காலத்தில் 75 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், சில பள்ளிகள் மட்டும்தான் இந்த உத்தரவைக் கடைப்பிடித்துக் கட்டணத்தை வசூலிக்கின்றன. பெரும்பாலான பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறிப் போக்குவரத்து, விளையாட்டு உபகரணம், ஆய்வகம், சிறப்பு வகுப்பு என முழுக் கட்டணத்தையும் வசூலிக்கின்றன. பெற்றோர்களை மிரட்டுகின்றன.
இதனைக் கண்காணிக்க வேண்டிய கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கத் தனிக் குழுவைப் பள்ளிக் கல்வித்துறை ஏற்படுத்த வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்" என்று குறிப்பிட்டார்.
சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்
பேரிடர்க் காலத்திலும் தனியார் பள்ளிகள் கட்டாயக் கட்டண வசூல் செய்வதைக் கண்டித்து காமராஜர் சிலை முன்பு சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு நேரு எம்எல்ஏ தலைமை தாங்கினார். பிரகாஷ்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை எம்எல்ஏக்கள் கூறுகையில், "புதுவையில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையை நடத்தி வருகின்றன. கரோனா நெருக்கடியிலும் மாணவர்கள், பெற்றோர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு ஆண்டுக்கான முழுக் கல்விக் கட்டணத்தையும் கட்டும்படி வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் மூலம் பாடம் நடத்திவிட்டு, கல்வி, சீருடை, பஸ், ஆய்வக கட்டணம் எனப் பெற்றோரிடம் வசூலிக்கின்றனர். கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கல்வித்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிப்பதால் போராட்டம் நடத்துகிறோம்" என்று தெரிவித்தனர்.