தமிழகம்

தொன்மை, பாரம்பரியம் மாறாமல் மதுரை நவீனப்படுத்தப்படும்: புதிய மாநகராட்சி ஆணையாளர் உறுதி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

‘‘மதுரை மாநகரின் தொன்மை, பாரம்பரியம் மாறாமல் நவீனப்படுத்தப்படும், ’’ என்று மாநகராட்சியின் 66வது புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கே.பி. கார்த்திகேயன் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த விசாகன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாநகராட்சியின் புதிய ஆணையாளராக டாக்டர் கே.பி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

கே.பி.கார்த்திகேயன் மதுரை மாநகராட்சியின் 66வது ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின் புதிய ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா பரவும் இந்த நெருக்கடியான நேரத்தில் பணிபுரிய வாய்ப்பு கொடுத்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரை தொன்மையும், பழமையும் மிகுந்த நகரமாகும். மாநகராட்சி 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சிறப்புமிக்க மிகுந்த பெரிய மாநகராட்சியாகும். புதிய வளர்ச்சிக்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ரூத் திட்டங்களின் கீழ் பல்வேறு முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரை மாநகரின் ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வரலாறு உண்டு.

இவ்வரலாற்று சிறப்புமிக்க மாநகரம் தொன்மை மாறாமல் நவீனமாக்கப் படுவதற்கான அடிப்படை திட்டமிடல் மேற்கொள்ளப்படும். மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள், சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் தடையில்லாமல் தொடருவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

அமைச்சர்கள் ஆலோசனை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மதுரை மாநகராட்சி மாநகரத்தில் கரோனா பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கார்த்திகேயன், இதற்கு முன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர், டைடல் பார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், சிப்காட் நிர்வாக இயக்குனர் ஆகிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.

மேலும் கரோனா கட்டளை மையத்தில் கடந்த ஒரு மாத காலமாக பணிபுரிந்து வந்துள்ளார். எம்.பி.பி.எஸ், மருத்துவ படிப்பு பயின்று மருத்துவராகப் பணிபுரிந்துள்ளார்.

முன்பு இந்திய ரயில்வே, ஒன்றிய அரசின் வர்த்தகத்துறையில் உதவிச் செயலாளர், திருப்பத்தூர் மற்றும் நாகப்பட்டினத்தில் சார் ஆட்சியராகவும் பணிபுரிந்து உள்ளார்.

SCROLL FOR NEXT