ராமநாதபுரம் மாவட்ட விவசாயியின் மகன் சொந்த மாவட்டத்திலேயே ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கடந்த 7 மாதங்களாக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பணியிடம் மாற்றப்பட்டு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் எஸ்.கோபால சுந்தரராஜ் மாற்றப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கோபால சுந்தரராஜ், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள மாவிலா தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகவேலின் மகனாவார்.
இவர் ஆரம்பக் கல்வியை ராமநாதபுரம் மற்றும் சத்திரக்குடி அருகே மென்னந்தி கிராமத்திலும், நடுநிலைக் கல்வியை மாவிலாதோப்பிலும், உயர்நிலைக்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வியை ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியிலும் முடித்துள்ளார்.
அதனையடுத்து பி.எஸ்.சி.,(விவசாயம்) இளங்கலை கல்வியை கோவை வேளாண் கல்லூரியிலும், முதுகலை விவசாயத்தை டெல்லி பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.
அதனையடுத்து 2012-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 5-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். அதனையடுத்து தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
சாதாரண விவசாயியின் மகன் சொந்த மாவட்டத்திலேயே ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளதால், மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.