உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், கோவை மாநகரக் காவல் ஆணையர் தீபக் டாமோர், மேற்கு மண்டலக் காவல்துறை தலைவர் ர.சுதாகர், துணைத் தலைவர் எம்.எஸ்.முத்துசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்காரா ஆகியோர் இன்று (ஜூன் 14) ஒரே நேரத்தில் ரத்த தானம் அளித்தனர்.
ரத்த தானம் அளித்த பிறகு ஆட்சியர் எஸ்.நாகராஜன் கூறும்போது, ''ஓராண்டில் ஆண்கள் நான்கு முறையும், பெண்கள் மூன்று முறையும் ரத்த தானம் அளிக்கலாம். அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்கள், விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்கள், ரத்தப் பற்றாக்குறையுள்ள கர்ப்பிணிகள், ரத்த தட்டு அணுக்கள் குறைபாடு உள்ளவர்கள் உட்படப் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் செலுத்த வேண்டியது அவசியம். ஆரோக்கியமான 18 வயது வயது முதல் 60 வயது வரையுள்ளவர்கள் ரத்த தானம் அளிக்கலாம்.
கொடையாளர்களிடமிருந்து 300 மி.லி. ரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. ஒவ்வொருவரும் தானமாக வழங்கும் ஒரு யூனிட் ரத்தம் மூலம் நான்கு உயிர்களைக் காப்பாற்ற முடியும். கரோனா தொற்று காலத்தில் தன்னார்வக் குருதி கொடையாளர்கள், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன் ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்துகொண்டவர்கள் 3 நாட்கள் கழித்துத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம்'' என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, மாநகர நகர் நல அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.