சேலத்தில் நடந்த திருமண விழாவில் மணமக்கள் சோசலிஷம், மம்தா பானர்ஜியை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட மாநில செயலாளர் இரா.முத்தரசன். 
தமிழகம்

சேலம் திருமண விழாவில் சுவாரஸ்யம்: மம்தா பானர்ஜியை கரம்பிடித்த சோசலிஷம்

செய்திப்பிரிவு

சேலத்தில் நடந்த திருமணத்தில் மணமகன் பெயர் சோசலிஷம், மணமகள் பெயர் மம்தா பானர்ஜி என்பதால் இவர்கள் திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் சேலம் மாவட்ட செயலாளர் ஏ.மோகன். இவர் தனது 3 மகன்களுக்கும் ஏ.எம்.கம்யூனிஷம், ஏ.எம்.லெனினிஷம், ஏ.எம்.சோசலிஷம் என பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில், தனது 3-வது மகன் ஏ.எம்.சோசலிஷத்துக்கும், தனது உறவினர் பழனிசாமியின் மகள் பி.மம்தா பானர்ஜிக்கும் திருமணம் செய்ய ஏ.மோகன் முடிவு செய்தார்.

மணமக்களுக்கு சேலத்தில் நேற்று (13-ம் தேதி) திருமணம் நடந்தது. திருமண விழாவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்து, மணமக்களை வாழ்த்தினார்.

இதில், சேலம் வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணமக்களின் மாறுபட்ட பெயர்களால் இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT