ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10.69 லட்சம் குடும்ப அட்டைதாதரர்களுக்கு 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்புடன் இரண்டாம் கட்ட கரோனா நிவாரண உதவித் தொகையை நாளை முதல் வழங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிடும் வகையில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் தொகையை இரண்டு கட்டங்களாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தவிரவிட்டுள்ளார். அதன்படி, முதற் கட்டமாக ரூ.2 ஆயிரம் தொகை ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் கட்ட நிவாரண தொகை வரும் 15-ம் தேதி (நாளை) முதல் வழங்கப்பட உள்ளது.
அதேபோல், ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை, 500 கிராம் சர்க்கரை, 500 கிராம் உளுத்தம் பருப்பு, 250 கிராம் புளி, 250 கிராம் கடலை பருப்பு, 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய் தூள், 1 குளியல் சோப்பு, 1 சலவை சோப்பு, 200 கிராம் டீத்தூள் என 14 வகையான பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்படவுள்ளன.
அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 10.69 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய மளிகை தொகுப்புகள் அடங்கிய பைகளை வேலூரில் உள்ள 9 கிடங்குகளில் பார்சல் செய்யும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் முடிந்த நிலையில் இன்று மூன்று மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க உள்ளனர். நாளை முதல் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி தினசரி 200 பேர் வீதம் மளிகை தொகுப்புகளுடன் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையை வழங்க உள்ளனர்.
வேலூரில் இன்று தொடக்கம்
வேலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கவுள்ளார்.