தமிழகம்

முதல்வர் பாதுகாப்பில் பெண் போலீஸாருக்கு விலக்கு

செய்திப்பிரிவு

முதல்வர் செல்லும் பாதையில் பெண் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழக முதல்வர்களாக இருந்தவர்கள் சாலைகளில் செல்லும்போது பாதுகாப்பு வசதிகளை அளிப்பது எம்ஜிஆர் காலத்துக்குப் பின் அதிகரிக்கப்பட்டது. அதற்குமுன் ஓரளவு போலீஸார் பாதுகாப்புக்கு ஆங்காங்கே நிற்பார்கள். முதல்வர் எம்ஜிஆர் காருடன் ஒரு பாதுகாப்பு வாகனமும் சில அமைச்சர்கள் வாகனமும் செல்லும்.

அதன்பின்னர் வந்த ஜெயலலிதா மிகக்கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டார். வழியெங்கும் போலீஸார் நிறுத்தப்பட்டனர். முதல்வர் செல்லும் வழியில் செக் போஸ்டுகள் அமைக்கப்பட்டன. தனக்கென்று தனியாக ஒரு பாதுகாப்புப் பிரிவை உருவாக்கி அதற்காக எஸ்.பி. பிரிவில் அதிகாரிகளை நியமித்தார்.

பின்னர் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. முதல்வர் கான்வாய் எனத் தனியாக உருவாக்கப்பட்டு, ஜாமர் கருவிகள், வெடிகுண்டு செயலிழப்பு வாகனம் என அணிவகுப்பு பெரிதானது. அதன் பின்னர் முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதியும் பாதுகாப்பு போலீஸார் எண்ணிக்கையைக் குறைத்தாலும் முதல்வர் பாதுகாப்புப் பிரிவைத் தொடர்ந்தார். அவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு இருந்தது. அதே கான்வாய் அணிவகுப்பு தொடர்ந்தது.

இந்நிலையில் அடுத்துப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் கோர்செல் கண்ட்ரோல் ரூம், கருப்பு உடை போலீஸார் என அவரும் வலம் வந்தார். முதல்வர் வருவதற்கு, போவதற்குப் பல மணி நேரம் முன்னரே சாலை வழி நெடுகிலும் வழிக்காவல் போலீஸார் என நூற்றுக்கணக்கான போலீஸார் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டனர். இது 12 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டதெல்லாம் நடந்ததுண்டு.

முதல்வர் விரும்பாவிட்டாலும் பணியில் உள்ள காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவால் கடைக்கோடி ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு போலீஸார் குறிப்பாக பெண் போலீஸார் மிகுந்த சிரமப்பட்டனர். குடிக்கத் தண்ணீர் இல்லாமல், இயற்கை உபாதைக்கு ஒதுங்க முடியாமல், சாப்பாடு சரிவரக் கிடைக்காமல், உடல் நலக்கோளாறு இருந்தாலும் பல மணி நேரம் நிற்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.

இதில் பெண் போலீஸாருக்கு விலக்கு வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வந்தது. இந்நிலையில் இந்தக் கோரிக்கை முதல்வர் ஸ்டாலின் காதுக்குச் சென்ற நிலையில், முதல்வர் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததன் பேரில் வாய்மொழி உத்தரவாக பெண் காவலர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெண் காவலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

எனினும் பிரச்சினை ஏற்பட்டால், போராட்டங்கள் நடந்தால் பெண்களைப் பெண் காவலர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்கிற விதி உள்ளதால் முதல்வர் செல்லும் பாதையில் பெண்களால் பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் யார் கையாளுவது என்கிற நடைமுறைச் சிக்கலும் உள்ளது.

அதேபோன்று பல காவல் நிலையங்களில் பெண் ஆய்வாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர். அவர்கள் முதல்வர் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடாமல் இருக்க முடியாது. ஆகவே, இது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதால் ஆணையாக வழங்கப்படாமல் வாய்மொழியாக வழங்கப்பட்டுள்ளது எனக் காவல்துறை வட்டாரத்தில் தகவல் ஓடுகிறது.

SCROLL FOR NEXT