தமிழகம்

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக் கோரி தமிழகம் முழுவதும் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாகமூடக் கோரி தமிழகம் முழுவதும்பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக பாஜக மாநிலபொதுச் செயலாளர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் நிலையில் பல்வேறு தொழில்கள் முழுமையாக தொடங்கப்படவில்லை. மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து நிற்கின்றனர். பல ஆயிரம்குடும்பங்கள் வருவாய் இன்றிகஷ்டப்படுகின்றன.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு என்று கூறி 14-ம் தேதிமுதல் டாஸ்மாக் கடைகளை திறப்பது என்று அரசு அறிவித்துள்ளது வேதனைக்குரியது.

முந்தைய ஆட்சியில் கருப்புச்சட்டை அணிந்து, டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வீடுகளின் முன்பு போராட்டம் நடத்திய இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை திறப்பது அதிர்ச்சியாக, வேடிக்கையாக இருக்கிறது.

எனவே ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி 13-ம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகள் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். கமலாலயம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT