தமிழகம்

சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை மாநகராட்சி குறைக்கக் கூடாது: வல்லுநர் குழு பரிந்துரை

செய்திப்பிரிவு

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அன்றாடம் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாதுஎன்று மாநகராட்சிக்கு வல்லுநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்புமற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வல்லுநர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சென்னையில் தொற்று குறைந்துவரும் நிலையில், தொற்று பரவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தவும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவ வசதிகள் குறித்தும், சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக், மாநில கரோனா கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு அலுவலர் தரேஸ் அகமது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக பிரதிநிதிகளான மனோஜ் முரேக்கர், கணேஷ் குமார் பரசுராமன், பிரதீப் கவுர் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டது.

பிசிஆர் பரிசோதனைகள்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், “தற்போது கரோனா தொற்று குறைந்து வந்தாலும் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைக்காமல் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். காய்கறி, இறைச்சி விற்பனை மேற்கொள்ளும் சந்தை பகுதிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை கணக்கிட்டு, அவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பதையும் கேட்டறிந்து அதனடிப்படையில் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று மாநகராட்சிக்கு வல்லுநர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.

இக்கூட்டத்தில், மாநகாரட்சி இணை ஆணையர்கள் சங்கர்லால் குமாவத், பி.என்.தர்,துணை ஆணையர்கள் ஜெ.மேகநாத ரெட்டி, ஆல்பி ஜான் வர்கீஸ், விஷு மகாஜன், பி.ஆகாஷ், ராஜகோபால சுங்கரா, வணிக வரித்துறை (அமலாக்கம்) இணை ஆணையர் நர்னவேர் மனிஷ் சங்கர் ராவ், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT