தாம்பரம் கோட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ. 37.50 லட்சம் மதிப்புள்ள 50 மடிக்கணினிகளை கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
வருவாய்த் துறையால் வழங்கப்படும் ஜாதி, வருவாய், இருப்பிடம்,வாரிசு, முதல் தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட அனைத்து வகைசான்றிதழ்கள், பட்டா மாறுதல்,பட்டா உட்பிரிவு செய்தல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து இணையவழியில் பெறப்படுகின்றன. இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கோட்டத்தில் பல்லாவரம், வண்டலூர், தாம்பரம் ஆகிய வட்டங்களில் உள்ள கிராமநிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 50 மடிக்கணினிகளை தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் வழங்கினார். இந்த நிகழ்வில் வட்டாட்சியர்கள் தாம்பரம் சரவணன், வண்டலூர் ஆறுமுகம் மற்றும் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பெருமாள் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
வருவாய்த் துறை வழியாக அனைத்து திட்டங்களும் இணையவழி சேவைகள் மூலம் துரிதமாகமக்களுக்கு சென்றடையும் வகையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இதை உணர்ந்து அனைவரும் செயல்பட்டு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வராத வண்ணம் சிறப்பான பணியை செய்ய வேண்டும் என கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் கிராம நிர்வாக அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.