தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என கூறிவிட்டு மதுக்கடைகளை திறப்பது ஏமாற்று வேலை: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் விமர்சனம்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் பாஜக சார்பில் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் பங்கேற்று அங்குள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், 5 படுக்கைகள், மருத்துவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்கள், பொது மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா முதல் அலையின்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எனக்கூறி போராட்டம் நடத்தினார். அத்துடன், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள், சாராய ஆலைகள் மூடப்படும் எனவும் கூறினார்.

பெட்ரோல் விலை குறைப்பு?

தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அதை மறந்துவிட்டு டாஸ்மாக் கடைகளை திறப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை. மத்திய அரசு ஒன்றிய அரசு அல்ல, அது பேரரசு. சட்டப் புத்தகத்தில் ஒன்றிய அரசு என இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி செய்யவில்லை. அதேபோல், திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் என அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப் படவேண்டும். அவற்றை இணையதளம் வாயிலாக கண்காணிக்க வேண்டும். கோயில் சொத்துகள், தங்கம், வெள்ளி சிலைகள், பஞ்சலோக சிலை அனைத்தையும் கண்காணிக்க வேண்டும். ஆகம விதிகள் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்று முருகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT