திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சைக்கு வந்த 544 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு பிறந்த அனைத்து குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி: திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களில் 544 கர்ப்பிணிகள் கரோனா பாதிப்புடன் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 390 பேருக்கு அறுவை சிகிச்சை மூலமாகவும், 154 பேருக்கு சுகப்பிரசவத்திலும் குழந்தை பிறந்தது.
தாய்மார்களுக்கு தொற்று இருந்தபோதும், இங்கு பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் கரோனா பாதிப்பு ஏற்படாமல் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பாதுகாத்தோம். அப்படியிருந்தும் பார்வையாளர்களின் இடையூறால் 3 குழந்தைகளுக்கு மட்டும் தொற்று ஏற்பட்டது. அதிலும் போராடி 3 குழந்தைகளையும் குணப்படுத்தினோம். அதேபோல கரோனா பரவல் அதிகமாக இருந்த கடந்த 3 மாதங்களில் 52 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இந்த குழந்தைகள் அனைவரும் நலமுடன் வீடு திரும்பினர்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக வருபவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதை பற்றிகூட கவலைப்படாமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மூளையில் ரத்தக் கசிவு, புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் மூலம் 3 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 57 வயதான ஒருவருக்கு கரோனா பாதிப்பு அதிகளவில் இருந்த நிலையிலும், கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது என்றார்.