ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் மகளிர் திட்டத்தின் கீழும், அரசு சாரா நிறுவனங்கள் மூலமும் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இம்மகளிர் குழுக்கள் வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவசர தேவைக்கான தனியார் நிறுவனங்களை நாடி கடன் பெற்றவர்களிடம் மேற்படி கடன் தொகை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்த கோரி நிதி நிறுவனங்கள் மிரட்டுவதாக புகார்கள் வந்துள்ளது.
எனவே கரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களிடமிருந்து கடன் வசூல் செய்யும் கடின போக்கினை தவிர்த்திட வேண்டும்.
மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்து பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை வங்கிகள், சிறு நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி சார்ந்த அமைப்புகள் அனைத்திற்கும் பொருந்தும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிதி சார்ந்த அமைப்புகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்ட வங்கி மற்றும் கடன் வழங்கும் நிதி நிறுவன மேலாளா்களுடன் நடைற்ற ஆலோசனை கூட்டத்தின்போது அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ராமேசுவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி தலைவர்ஜெரோன் குமார் தலைமையில் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த பெண்கள் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி கட்டாயப்படுத்துவதாகவும் செலுத்தாத தொகைக்கும் கூடுதல் வட்டி கேட்பதாகவும் புகார் மனுக்களை அளித்தனர்.